Published : 20 Jul 2016 02:41 PM
Last Updated : 20 Jul 2016 02:41 PM

உத்தராகண்டில் உரிய இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட வேண்டும்: கருணாநிதி

எந்தவிதமான குழப்பமும் ஏற்படாத வகையில் உத்தராகண்ட் மாநில முதல்வர் உறுதி அளித்திருப்பதைப் போல உரியதோர் இடத்தில் திருவள்ளுவர் சிலை அங்கே நிறுவப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில், நாமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட 12 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை ஒன்றினை ஹரித்துவாரில், கங்கை நதிக் கரையோரத்தில் கடந்த ஜுன் மாதம் 29ஆம் தேதியன்று நிறுவிட பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் ஏற்பாடு செய்த போது, அங்கேயுள்ள சாதுக்களில் ஒரு பிரிவினர் அங்கே திருவள்ளுவரின் சிலையினை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் காரணமாக திருவள்ளுவரின் சிலையினை கங்கைக் கரை அருகே உள்ள மாநில அரசுக்குச் சொந்தமான பொதுப்பணித் துறை விருந்தினர் இல்ல வளாகத்திலே தற்காலிகமாக நிறுவிட, உத்தராகண்ட் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நாயக், மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொண்டு அந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போதே அங்கே கலந்து கொண்டவர்கள், திருவள்ளுவரின் சிலையை மரியாதைக்குரிய பொது இடத்தில் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளையும் அந்த மாநில அரசு எடுத்து வந்தது.

இந்த நிலையில் தான் ஒருசில நாளேடுகளில், ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றும், திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு, பிளாஸ்டிக் பையில் வைத்து, கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அங்கே உள்ள ஒரு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டு, 'திருவள்ளுவர் சிலைக்கு அவமானம்' என்ற தலைப்பில் செய்தி வந்து, அதனைப் படித்த தமிழர்கள் பெரிதும் மனக் கொந்தளிப்புக்கு ஆளாக நேர்ந்தது.

இது பற்றி தருண் விஜய் கூறும்போது, 'திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக் கரைப் பகுதியில் நிறுவுவதற்கான ஒப்புதலை உத்தராகண்ட், உத்தர பிரதேசம் ஆகிய இரண்டு மாநில அரசுகள் இணைந்தே வழங்கின. சிலை திறப்பு விழாவுக்கு முந்தைய நள்ளிரவில் ஒரு பிரிவு சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் எங்கள் அனுமதியின்றி சிலையை கங்கை கரைப் பகுதியிலிருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டியது உத்தராகண்ட் மாநில அரசின் பொறுப்பு. திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை இழைக்கக் காரணமாக இருந்த மாவட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தராகண்ட் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு பிரிவு சாதுக்கள் தெரிவித்துள்ள ஆட்சேபம் குறித்து அவர்களுடன் பேசித் தீர்வு காணப்படும்' என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே அகில இந்திய தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்குச் சென்றிருப்பதாகவும். அவர்களிடம் உத்தராகண்ட் மாநில முதல்வர் திருவள்ளுவர் சிலையை அடுத்த சில நாட்களில் வேறு இடத்தில் நிறுவப்படும் என்று உறுதியளித்திருப்பதாகவும் செய்திகள் வந்திருப்பது ஆறுதலைத் தருகிறது.

இந்நிலையில் தான் திருவள்ளுவர் சிலையினை நிறுவுவதில் உண்டான பிரச்சினை குறித்து கவிஞர் வைரமுத்துவும், தமிழர் தலைவர் வீரமணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத் அடுத்த சில நாட்களில் திருவள்ளுவருக்கு மரியாதையும், கவுரவமும் அளிக்கும் வகையில் அவரது சிலையை நிறுவிட அந்த மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்திருப்பது ஏற்பட்ட மனக் காயத்திற்கு மருந்து தடவுவதாக அமைந்திருக்கிறது. அதற்காக தமிழ் உணர்வு படைத்த மக்களின் சார்பில் உத்தராகண்ட் மாநில முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது தமிழர்களின் உணர்வுகளில் இரண்டறக் கலந்துவிட்ட இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இதன் காரணமாக மேலும், எந்தவிதமான குழப்பமும் ஏற்படாத வகையில் உத்தராகண்ட் மாநில முதல்வர் உறுதி அளித்திருப்பதைப் போல உரியதோர் இடத்தில் திருவள்ளுவர் சிலை அங்கே நிறுவப்பட உலக பொது மறை தந்த உத்தமரைப் போற்றுதல் செய்திட முன் வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x