ஏற்காடு இடைத்தேர்தல்: அதிமுக, திமுக உள்பட 11 பேர் போட்டி

ஏற்காடு இடைத்தேர்தல்: அதிமுக, திமுக உள்பட 11 பேர் போட்டி
Updated on
1 min read

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 11 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலைத் தேர்தல் நடத்தும் அலுவலர் சபாபதி புதன்கிழமை வெளியிட்டார். ஒரு சுயேச்சை வேட்பாளர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனு பரிசீலனையின்போது 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 12 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பு மனு வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாளாகும். தேர்தல் நடத்தும் அலுவலர் சபாபதியை, சுயேச்சை வேட்பாளர் செல்வம் சந்தித்து வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். உழைப்பாளர் மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வம், ஏற்காடு இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகி கொண்ட நிலையில், அவர் தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

மாலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சபாபதி, ஏற்காடு தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அ.தி.மு.க. சார்பில் சரோஜா, தி.மு.க. சார்பில் மாறன் மற்றும் ஒன்பது சுயேச்சைகள் உள்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை வெளியிட்டார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னமும், தி.மு.க.வுக்கு உதய சூரியன் சின்னமும் ஒதுக்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் ஏ.எஸ்.பழனி - டை, மு.பழனிவேல் - ஊதல், கே. பழனிவேல் - வாளி, கே.பூபாலன் - மோதிரம், இ.பொன்னுசாமி - ஊன்றுகோல், சி.மணிகண்டன் - மின்கம்பி, கே.மதியழகன் - பலூன், ஆ.ராஜாகண்ணு - புல்லாங்குழல், அ.ராஜேந்திரன் - புனல் ஆகிய சின்னங்களைத் தேர்தல் நடத்தும் அலுவலர் சபாபதி ஒதுக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in