வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்க நூதன முயற்சி: தண்ணீரில் மிதக்க விடப்பட்ட தெர்மோக்கோல் அட்டைகள்
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோக்கோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 23.10 அடி. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அணையில் உள்ள நீர் ஆவியாவதன் மூலம் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலை நீடித்தால் வைகை அணை மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பயன்பெறும் பகுதிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். இதனால் வைகை அணையில் உள்ள தண்ணீரை ஆவியாகாமல் தடுக்க தண்ணீர் மேல் தெர்மோக்கோல் அட்டைகளை பரப்பி வைக்கும் நூதன முயற்சி பரீட்சார்த்த முறையில் நேற்று செயல்படுத்தப்பட்டது.
வைகை அணையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாச்சலம், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் முன்னிலை வகித்தனர். தெர்மோக்கோல் அட்டைகளை மிதக்க விடுவதை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியதாவது:
கடும் வெயிலின் தாக்கம் காரணமாக அணையில் உள்ள நீர் ஆவியாவதன் மூலம் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதை தடுக்க தண்ணீர் மீது தெர்மோகோல் அட்டை பரீட்சார்த்த முறையில் மிதக்க விடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கரை ஒதுங்கிய தெர்மோக்கோல் அட்டைகள்
வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்க வெளிநாட்டு தொழில்நுட்பம் என்று கூறி தெர்மோக்கோல் அட்டைகளை பொதுப்பணித் துறையினர் நேற்று அமைச்சர் முன்னிலையில் மிதக்கவிட்டனர். 200 சதுர மீட்டர் பரப்பில் மிதக்கவிட திட்டமிடப்பட்டு பரீட்சார்த்த முறையில் நேற்று குறைவான சதுர மீட்டர் பரப்பில் அட்டைகளை மிதக்க விட்டனர். அணைப் பகுதியில் அடித்த காற்றால், அமைச்சர்கள், ஆட்சியர்கள் நிகழ்ச்சியை முடித்து கரை ஏறுவதற்குள் தெர் மோக்கோல் அட்டைகள் காற்றின் வேகத்தில் கரை ஒதுங்கின.
