Published : 04 Nov 2013 12:42 PM
Last Updated : 04 Nov 2013 12:42 PM

சென்னை, கூடங்குளம் உள்பட 12 அலகுகளில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர், தூத்துக்குடி, வட சென்னை, கூடங்குளம் உள்பட பல்வேறு நிலையங்களின் 12 அலகுகளில், தொழில்நுட்பக் கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தீபாவளி விடுமுறையில் தொழிற்சாலைகள் இயங்காததால், தமிழக மின்வாரியம் மின் வெட்டை அமல்படுத்தாமல் நிலைமையை சமாளித்தது.

ரூ.17,170 கோடி செலவில் கட்டப்பட்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தில், கடந்த அக்டோபர் 22ம் தேதி சோதனை முறையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இங்கு முதற்கட்டமாக 200 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடக்கிறது. கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறால் கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, நவம்பர் 1-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

“ஆனால் திட்டமிட்டபடி கோளாறு சரிசெய்யப்படாததால், ஞாயிற்றுக்கிழமை வரை மின் உற்பத்தி தொடங்கவில்லை,” என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மின் நிலையத்தின் முதல் மற்றும் ஐந்தாம் அலகுகளில், சனிக்கிழமை மாலையில் கொதிகலனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

நெய்வேலி மின் நிலையத்தில், முதல் நிலையின் ஏழாவது அலகில் டர்பைன் சுழலி இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் 100 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு பராமரிப்புப் பணி காரணமாக நெய்வேலி நிலையத்தின் முதல் நிலையின் 8வது அலகில் 100 மெகாவாட்டும், இரண்டாம் நிலையின் மூன்றாம் அலகில் 210 மெகாவாட்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர எண்ணூர் நிலையத்தின் 1 (60 மெகாவாட்) மற்றும் ஐந்தாம் அலகு (110 மெகாவாட்), வட சென்னையில் இரண்டாம் அலகு (210 மெகாவாட்), மேட்டூர் புதிய நிலைய மூன்றாம் நிலை (600 மெகாவாட்) ஆகியவற்றிலும் பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மின் நிலையங்களில், தமிழகத்துக்கு மின்சாரம் தரும் கைகா அணு மின் நிலையத்தின் நான்காம் அலகில் 220 மெகாவாட் மற்றும் தேசிய அனல் மின் கழகத்தின் சிம்மாத்ரி நிலையத்தின் 4ம் அலகில் 500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மத்திய மின் தொகுப்பிலிருந்து மொத்த ஒதுக்கீடான 3,520 மெகாவாட்டில், தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை 2,727 மெகாவாட் மட்டுமே கிடைத்தது.

அதே நேரம் தமிழக நீர் மின் நிலையங்களில் உற்பத்தியான 1,291 மெகாவாட், காற்றாலையில் உற்பத்தியான 236 மெகாவாட் மற்றும் வெளி மாநில தனியார் மின் நிலையங்களில் விலைக்கு வாங்கப்பட்ட 600 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி, தமிழக மின் வாரியம் நிலைமையை சமாளித்தது, என மின் வாரிய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

பரவலான மழையால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான நாட்களை விட 60 மில்லியன் யூனிட் குறைவாகவே மின்சாரம் தேவைப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை 198.45 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடங்குளத்தில் தொடரும் கோளாறு

பல்வேறு தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் திறக்கப்பட்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தில், கடந்த அக்டோபர் 22-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தியை தொடங்கி, 4.34 மணிக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர், அக்டோபர் 25-ம் தேதி, இரவு 9.43 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி, அக்டோபர் 29-ம் தேதி காலை 8.03 மணிக்கு இயந்திர பழுதால் மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய அணுமின் கழக பொறியாளர்கள் கூறும்போது, “இன்னும் வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்காததால், ஆரம்ப கட்ட தொழில்நுட்பப் பழுதுகளை சரிசெய்யும் பணி நடக்கிறது” என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x