Published : 26 Apr 2017 02:45 PM
Last Updated : 26 Apr 2017 02:45 PM

ரயில் கட்டணச் சலுகை பெறும் மூத்த குடிமக்கள் வயது வரம்பை உயர்த்தக் கூடாது: முத்தரசன்

ரயில் பயண கட்டணச் சலுகை பெறும் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை உயர்த்த கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ரயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகையைப் பறிக்கும் வகையில், மூத்த குடிமக்கள் வயது வரம்பை பெண்களுக்கு 58 லிருந்து 68 ஆகவும், ஆண்களுக்கு 60 லிருந்து 70 ஆகவும் உயர்த்துவதற்கு ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னர் நடைமேடை கட்டணத்தை ரூ 5 லிருந்து 10 ஆக உயர்த்தியது, தொடர்ந்து சாதாரண தொடர் வண்டிகளை அதிவிரைவு வண்டி என்ற பெயரில் கட்டணத்தை உயர்த்தியது, படுக்கைவசதி கொண்ட முன்பதிவு பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து, தட்கல் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. இதன் மூலம் கடுமையான கட்டண உயர்வு செய்யப்பட்டது.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகள் ரத்து செய்யும் கட்டணத்தை ரூ 60 ஆக உயர்த்தியது. உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்யும் போது இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடைசி 4 மணி நேரத்தில் ரத்து செய்தால் முழுக் கட்டணத்தையும் இழந்துவிடவேண்டிய அவலநிலைஉள்ளது.

இது தவிர சிறப்பு ரயில்கள் என்ற பெயர்களில் கடுமையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக மக்கள் தலையில் கடுமையான கட்டணச் சுமையை ஏற்றி வரும் மோடியின் மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் பயணிகள் விரோதக் கொள்கையை கைவிட்டு, லட்சக் கணக்கான ரயில் பயணிகளின் நலனை பாதுகாக்க வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x