Last Updated : 06 Nov, 2013 02:48 PM

 

Published : 06 Nov 2013 02:48 PM
Last Updated : 06 Nov 2013 02:48 PM

கோவை: நம்பமுடியுமா நம்ம ஊர் கூர்க்காவை?!

'சலாம் சாப்' என்று சல்யூட் செய்யும் காக்கி உடையணிந்து, வெள்ளை வெளேர் நிறத்துடன் காணப்படும் அந்த மனிதர்களை, தமிழக மக்கள் காலங்காலமாக மிகக்கனிவுடனே பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்கள், மாதந்தோறும் வீடு தேடி வந்து கைநீட்டும்போது, பாக்கெட்டில் உள்ளதை தருகிறார்கள் என்றால், அதற்குக் காரணமாக அவர்களின் ரத்தத்தில் ஊறியிருக்கும் நேர்மை. ராத்திரி நேரத்தில் நிம்மதியாகத் தூங்கும்போது திருட்டு, கொள்ளை நடக்காமல் நம்மை காப்பாற்றுகிறாரே என்ற அபரிமித நம்பிக்கை.

கூர்க்கேஸ் என்றும் கூர்க்கா என்றும் அழைக்கப்படும் இந்த நேபாளிகளின் இடுப்பில் தொங்கும் கத்தி, உறையை விட்டு வெளியே வந்தால், ரத்தக்கறை இல்லாமல் திரும்ப உறைக்குள் போகாது. அந்த அளவுக்கு அவர்கள் மீது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை எல்லாம் பொய்யாய், வெறுங்கனவாய் போகும் விதமாக, சில கூர்க்காக்கள் கூட்டுச் சேர்ந்து, கொள்ளையில் ஈடுபட்டு, 3 பேர் கைதாக, சிலர் தலைமறைவுப் பட்டியலில் வர, யாரைத்தான் நம்புவதோ என திகிலடைந்து நிற்கிறது கோவை.

நள்ளிரவில் கைவரிசை...

ஆர்.எஸ்.புரம், டி.பி. சாலையில் உள்ளது பழமுதிர் நிலையம். இங்கே கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நள்ளிரவு, ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த, மர்ம நபர்கள், கடையினுள் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களைத் திருடிச் சென்றனர்., இத்திருட்டில் 3 பேரை, மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர், திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்கள் நேபாளம், நாகேந்திரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், திருட்டு நடைபெற்ற பகுதியில் கூர்க்காவாக, பணியாற்றியவர்கள் என்பதும்தான், இதற்கான அடிமுடி.

காட்டிக் கொடுத்த கேமிரா... திருட்டு நடைபெற்ற பகுதியில், போக்குவரத்து சிக்னலில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமிராவில், 3 பேர் சைக்கிளில் செல்வது பதிவாகியுள்ளது. இதை முக்கியத் துருப்புச் சீட்டாக வைத்து, விசாரணையை ஆரம்பித்த காவல்துறை, திருட்டு நடைபெற்ற நேரத்தில், அப்பகுதியின் செல்போன் பயன்பாடுகளை ஆராய்ந்துள்ளனர். அதில் ஒரு எண்ணில், கூர்க்கா ஒருவர் நீண்ட நேரம் பேசியது தெரிய வந்தது. சைக்கிளில் சென்று கேமராவில் பதிவான 3 பேர், செல்போனில் நீண்ட நேரம் பேசியிருந்த கூர்க்கா, இந்த இரு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி, கூர்க்காவிடம் விசாரணை நடத்தியதில், இந்த கூர்க்கா மேலும் 4 கூர்க்காக்களுடன் சேர்ந்து, இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. அதில் 3 பேர் பிடிபட, 2 பேர் தலைமறைவாகி விட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்திரா பகதூர், ரோக்கியா, சதானந்த பாத்தியாயா ஆகிய மூவரிடமிருந்து ரூ.28 ஆயிரத்தை மட்டும் மீட்ட காவல்துறை, எஞ்சிய 2 பேரையும், பணத்தையும் மீட்க, பெங்களூர் விரைந்துள்ளது. இதன் பின்னணியில் கூர்க்காக்களைப் பற்றி, பொதுமக்களிடம் சர்ச்சை எழும் முன்னே, காவல்துறையினரிடமும் பெரும் சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

இரவில் ரோந்து வந்து போலீஸ் போலவே விசிலடித்து, திருடர்களை விரட்டும் கூர்க்காக்களுக்கு, யார் அங்கீகாரம் கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கோவை மாநகரில் மட்டும் 1500 மேல் கூர்க்காக்களும், புறநகரில் 500க்கும் மேற்பட்டோரும் உள்ளனர். இவர்கள் மூன்று பிரிவுகளாகச் செயல்படுகின்றனர். கூர்க்கா மாவோயிஸ்ட், கூர்க்கா காங்கிரஸ், கூர்க்கா பொதுவானவர்கள் என்று அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

எப்போது, எங்கிருந்து வருகிறார்கள், எப்போது தங்கள் ஊருக்குச் செல்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. உண்மையிலேயே அவர்கள் கூர்க்காதானா? எந்த ரிக்கார்டுமே காவல் நிலையங்களில் இல்லை. விசில் ஊதுவது யாருக்காக? முன்பெல்லாம் கூர்க்கா வந்தால், உள்ளூர் காவல்நிலையத்திற்குச் சென்று ஆய்வாளரிடம் அறிமுகமாவார். அவர் அனுமதித்த பின்பே, ஊருக்குள் காவல் காக்க செல்வார்கள். எல்லோரும் நேர்மையாக, உண்மையாக இருந்தார்கள். இப்போது அப்படியில்லை. அவர்கள் விசில் ஊதி, ராத்திரியில் வலம் வருவது, திருடர்களை துரத்தவா? அல்லது அவர்களை உஷார்படுத்தவா என்றே தெரியவில்லை.

இந்த மூன்று கூர்க்காக்கள் கூட, பழமுதிர் நிலையத்தில், இரண்டு திருடர்களுக்கு கடையை நோட்டமிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தவிர, திருடும்போது சாலையின் மூன்று மூலைகளில் நின்று, விசில் மூலமே சிக்னல் கொடுத்திருக்கிறார்கள் என்று கதை, கதையாய் தகவல்களை சொன்னார்கள். இது, நேர்மையாகப் பணியாற்றி வரும் கூர்க்காக்களின் நம்பகத் தன்மையையும் சந்தேகிக்க வைக்கிறது.

இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை, கூர்க்கா ஆகியோர் இணக்கமில்லாத சூழ்நிலையையும் வெளிப்படுத்துகிறது. கோவை மட்டும் அல்லாது தமிழகம் முழுவதிலும், இரவு பாதுகாப்பில் ஈடுபடும் கூர்க்காக்கள் குறித்த விவரங்கள், காவல் நிலையம் வாரியாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 'இதனால், கூர்க்காக்களே இரவில் சுற்றித் திரிவது போன்று, திருடுவதற்காக கண்காணித்தாலும், உண்மையைக் கண்டறிய முடியாதில்லையா?' என்று ஆதங்கத்துடன் கேட்கும் மக்களை, கோவையில் நிறைய காணமுடிகிறது.

'விரைவில் கூர்க்கா பட்டியல்'

கோவை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது: கோவை மாநகரில் பணியாற்றி வரும் கூர்க்காக்கள் விவரங்கள் பற்றி சேகரிப்பு இதுவரை இல்லை என்பது உண்மைதான். இனி கோவை மாநகரில் இரவு ரோந்து செல்லும் கூர்க்கா விவரம், பணியாற்றும் இடம் ஆகியவற்றை, அந்தந்த பகுதியில் காவல்நிலையத்திற்கு தெரிவிக்க கட்டாயப்படுத்த உள்ளோம். இந்த நடைமுறையை விரைந்து செயல்படுத்த உள்ளோம். இது தொடர்பாக, அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும். இதன்மூலம், கூர்க்காக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x