பொதுவெளியும் பெண்களுக்குச் சொந்தமாக வேண்டும்: சென்னை மகளிர் திருவிழாவில் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா பேச்சு

பொதுவெளியும் பெண்களுக்குச் சொந்தமாக வேண்டும்: சென்னை மகளிர் திருவிழாவில் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா பேச்சு
Updated on
3 min read

ஆண்கள் சுதந்திரமாகப் பொது வெளிகளில் செயல்படுவது போல் பெண்களுக்கும் பொதுவெளிகள் சொந்தமாக வேண்டும் என்று வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா வலியுறுத்தினார்.

`தி இந்து’ தமிழ் நாளிதழுடன் ஞாயிற்றுக்கிழமைதோறும் டேப்லாய்டு வடிவில் 16 பக்க வண்ண இணைப்பாக ‘பெண் இன்று’ வெளியாகிறது. இதன் சார்பில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மகளிர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நெய்வேலி, மதுரை, திருச்சி, ஈரோடு, திருநெல்வேலியைத் தொடர்ந்து சென்னை தி.நகர் விஜயாமஹால் அரங்கில் இவ்விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா, ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் மற்றும் பேச்சாளர் பர்வீன் சுல்தானா, தமிழக முன்னாள் டிஜிபி திலகவதி ஐபிஎஸ், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன், வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர்சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியைக் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா பேசியதாவது:

ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளை கற்றுத்தருவது போல். ஆண் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கற்றுத்தர வேண்டும். 2011-ம் ஆண்டு ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையின்படி உலகம் முழுவதும் உற்பத்தி சார்ந்த துறைகளில் பெண்களுடைய பங்கு மூன்றில் இரண்டாக உள்ளது.

ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் காயப்படுத்துவது சட்டத்துக்கு எதிரான விஷயம். 20 வருடங் களுக்கு முன்பு பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான எந்த உதவியும் கிடைக்காமல் இருந்தது. ஆனால், இன்று பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், குடும்ப வன்முறை தடைச் சட்டம் போன்ற ஏராளமான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பொதுவெளியில் ஆண்கள் சுதந்திரமாகச் செயல்படுவது போல், பெண்களும் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பொதுவெளியில் பெண்ணை மனிதர்களாக பார்க்கும் எண்ணம் உருவாக வேண்டும். பெண்களின் உரிமைகளைச் சட்டங்கள் மூலம்தான் நிலைநாட்ட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மற்றும் பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசியதாவது:

‘தி இந்து’ நாளிதழ் நடத்தும் மகளிர் திருவிழா மற்ற நிகழ்ச்சிகளை போல் அல்ல. இங்கு வந்திருக்கும் வாசகிகள் பெண்களுக்கான விஷயங்களை கூர்மையாகப் பார்ப்பவர்கள். ‘தி இந்து’ நாளிதழில் பெண்களைப் பற்றிய செய்திகளை மிகச் சரியான தொனியில் தெரிவிப்பார்கள். பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது இல்லை. ஆண் சிந்தனை கொண்ட பெண்களும் உள்ளனர். பெண் சிந்தனை கொண்ட ஆண்களும் உள்ளனர். பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை உரக்கச் சொல்ல வேண்டும். தங்களுக்கு எதிராக நடைபெறும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கைத் தளத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். பெண்களுடைய முன்னேற்றம் ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் ஆகும். தீபம் எரிந்து வெளிச்சம் கொடுப்பது போல் பெண்களைப் பாதுகாப்பது இந்த சமுதாயத்தின் வெளிச்சம் ஆகும் என்றார்.

திலகவதி ஐ.பி.எஸ் பேசியதாவது:

இன்றைய சூழ்நிலையில் சின்ன குழந்தைகள்கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு கிறார்கள். இப்படிப்பட்ட கொடூர மான குற்றங்களைச் செய்பவர்கள் பலர் ஆபாசமான படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் சிறு பிள்ளைகளிடம் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களைச் சீரழிக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆண், பெண் குழந்தைகள் இருவரையும் ஒரே மாதிரியாக வளர்க்க வேண்டும். பெண் குழந்தைக்குச் சொல்லித்தரும் அனைத்து விஷயங்களையும், ஆண் குழந்தைகளுக்கும் சொல்லித் தரவேண்டும். பெண் விடுதலை என்பது குடும்பங்களை உடைப்பது கிடையாது. ஆண் பிள்ளைகளுக்கும் சமையல் செய்வது, வீட்டைப் பராமரிப்பது போன்ற விஷயங்களை கற்றுத்தர வேண்டும். குடும்ப அமைப்புக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தை மாற்ற வேண்டும். அதன் மூலமாகத்தான் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது:

பெண்கள் குறித்த பல அறிவார்ந்த கருத்துகளை ‘உங்கள் குரல்’ மூலம் வாசகிகள் வழங்கி வருகின்றனர். அவர்களின் அறி வார்ந்த அணுகுமுறை ‘தி இந்து’ தமிழ் நாளிதழை ஆக்கபூர்வமான கருவியாக மாற்ற உதவியாக உள்ளது.

‘பெண் இன்று’ இணைப்பிதழில் மட்டுமல்லாமல் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில்கூட பெண்களைப் பற்றிய உயர்வான பார்வைகொண்டே செய்திகளை வழங்கிவருகிறோம். பெண்களைத் தரக்குறைவாக, தவறாகக் காட்சிப்படுத்தும் திரைப்படங்களை நாங்கள் ஊக்கப் படுத்துவதில்லை. பெண்களுக்கான சுதந்திரம், முன்னேற்றம், அவர்களுக்கு எதிரான சிக்கல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

காலை நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொகுப்பாளினி சசிகலா தொகுத்து வழங்கினார். மதியம் வாசகிகள் அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாற்று ஊடக மையம் சார்பில் பறையாட்டம், நீர் சிலம்பம், கரகாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.

பிற்பகல் முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சிகள், போட்டிகளால் விழா அரங்கம் களைகட்டியது. பறையாட்டம் அரங்கை அதிர வைத்தது. வாசகிகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பால் பாஸிங், மைமிங், பொட்டு ஒட்டும் போட்டி, கோலி விளையாட்டு, ரப்பர்பேண்ட் மாலை உருவாக்குதல், கயிறு முடிச்சு போடுதல், கோலப் போட்டி உள் ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. 5 பம்பர் பரிசுகள், 50 ஆச்சர்ய பரிசுகள் என்று விழா அரங்கமே பரிசு மழையில் நனைந்தது. மாலை நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவை லலிதா ஜுவல்லரி, சென்னை சில்க்ஸ்,பொன்வண்டு சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் பவுடர், எவர்வின் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ், மந்த்ரா, ஜெப்ரானிக்ஸ், ஸ்ரீ ஐஸ்வர்யா புடவைகள், மாம்பலம் ஐயர்ஸ், கரூர் ஹெச் டூ ஹெச் ஆரஞ்ச் இம்பெக்ஸ், ஹெல்த் பேஸ்கட், மை ட்ரீம்ஸ், நாயுடு ஹால், பொன்மணி வெட்கிரைண்டர், டேஸ்ட்டி, ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெய், ஸ்பிக்டெக்ஸ், வானசா ஸ்மார்ட் சானிட்டரி நாப்கின்ஸ், பி வெல் மருத்துவமனை, ரூபி பில்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in