Last Updated : 24 Dec, 2013 06:38 PM

 

Published : 24 Dec 2013 06:38 PM
Last Updated : 24 Dec 2013 06:38 PM

மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு

‘தமிழகத்தை குறைந்த நீராதாரம் கொண்ட மாநிலம் என்று கூறமுடியாது. முறையான நீர்நிர்வாகம் இல்லாததே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணம்’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.நடேசன்.

அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளரான இவர், விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல ஆண்டுகளாக நீர்நிர்வாக முறைகளை சுயமாக தெரிந்துகொண்டு, அவற்றை திறமையாக பயன்படுத்தியும் வருகிறார். இவர் குடியிருக்கும் முகப்பேர் ஜீவன் பீமா நகரில், நிலத்தடி நீர் மிக மோசமாக இருந்தது. ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் சாம்பார் போல இருந்தது. அதைக் குடிக்கவே முடியாது. துணி துவைத்தாலும் சுத்தமாக நுரை வராது. கொஞ்சம் நாட்களிலேயே துணிகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இந்த நீரில் குளிப்பவர்களுக்கு முடி கொட்டுவது, ஒவ்வாமை என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதனால், தண்ணீரை கழிவறைப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். குடிநீருக்கு செலவு அப்பகுதியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தபோது 2300 டிடிஎஸ் (டோட்டல் டிசால்வ்ட் சாலிட்ஸ்) இருந்தது. அதாவது அந்த நீரில் இரும்பு, உப்பு உள்ளிட்ட பல்வேறு தாதுப் பொருட்கள் அதிகமாக கலந்திருந்தன. 600 டிடிஎஸ் வரை இருக்கும் தண்ணீர்தான் குடிக்க ஏற்றது. எனவே, அப்பகுதி மக்கள், ஆயிரக்கணக்கில் செலவு செய்து லாரிகளில் குடிநீரை வாங்கி தொட்டிகளில் சேமித்து பயன்படுத்தி வந்தனர். கோடை காலத்தில் பணம் கொடுத்தாலும் குடிநீர் கிடைப்பது சிரமமாக இருந்தது. 10 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு லாரி தண்ணீர் வாங்க, ஆயிரம் ரூபாய் செலவாகும். கடந்த ஆண்டில் மட்டும் நடேசனின் பிளாக்கில் தண்ணீருக்காக ரூ.76 ஆயிரம் செலவிடப்பட்டது.

இதையடுத்து, நிலத்தடி நீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் வாட்டர் ஃபில்டர்களை வாங்கிப் பொருத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தினமும் 5 ஆயிரம் லிட்டர் குடிநீரைப் பெறுவதற்கான வாட்டர் ஃபில்டர் விலை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். அதைத் தொடர்ந்து பராமரிக்க ஒருவரை பணிக்கு நியமிக்க வேண்டும், தனியாக மின் கட்டணம், ஆண்டுக்கு ஒருமுறை அதில் உள்ள வடிகட்டிகளை மாற்ற ரூ.10 ஆயிரத்துக்கு மேல் என்று செலவுக் கணக்கு எகிறிவிடும்.

இதையெல்லாம் தவிர்த்து குறைந்த செலவில் நிரந்தர தீர்வு காண நடேசன் திட்டமிட்டார். அனைவரிடமும் கலந்து பேசி தனது திட்டம் குறித்து விளக்கினார். பல ஆண்டுகளாக தண்ணீர் கஷ்டத்தை அனுபவித்த மக்கள், அவரது திட்டத்துக்கு இணங்கினர். உடனடியாக தனது பொறியியல் திறமையை பயன்படுத்தி களத்தில் இறங்கினார் நடேசன். இப்போது அவர்கள், நிலத்தடி நீரையே குடிக்கின்றனர். குழம்பிய நீரை குடிநீராக மாற்றியது குறித்து நடேசன் கூறியதாவது:

தண்ணீரில் உள்ள வண்டல் (செடிமென்ட்) அடியில் தேங்கும் வகையிலான அமைப்பு கொண்ட 2 தொட்டிகளை தரைதளத்தில் ஒன்றுடன் ஒன்றாக குழாய் மூலம் இணைத்தேன். அவை ஒவ்வொன்றும் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை. ஆழ்துளைக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், இந்த செடிமென்ட் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. படிகாரம், சலவை சோடா, நீர்த்த சுண்ணாம்பு போன்றவை உரிய விகிதத்தில் கலக்கும் வகையில் சிறிய அமைப்பை செய்து பொருத்தினேன். தொட்டி நீரில் படிகாரம் உள்ளிட்ட பொருட்கள் கலந்ததும், 1300 முதல் 1500 டிடிஎஸ் அளவுக்கு கடினத் தன்மை குறைந்தது. நிறமும் 95% வரை மாறி, தண்ணீர் தெளிவானது.

மழைநீர் சேகரிப்பு

செடிமென்ட் தொட்டியில் தண்ணீரை 24 மணி நேரம் தேக்கினால், வண்டல் அடியில் தங்கி தெளிந்த தண்ணீர் மேலே இருக்கும். அந்த நீரை சென்னைக் குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் தண்ணீருடன் ஸ்பிரே முறையில் கலந்துவிடுகிறோம். இதனால் நீரின் கடினத்தன்மை மேலும் குறைந்து 600 டிடிஎஸ்-க்கு சற்று கூடுதலாக மட்டும் இருக்கும். இதனால் இந்தத் தண்ணீரை காய்ச்சி அல்லது வடிகட்டி குடிக்க முடியும்.

அதுமட்டுமின்றி ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் 10 அடி ஆழத்துக்கு தோண்டி 10 வட்ட உறைகளை இறக்கினேன். அதன் கீழ் அடுக்கில் பெரிய கூழாங்கற்கள், அதற்கு மேலே சிறிய கூழாங்கற்கள், அதற்கு மேல் மணல் நிரப்பப்பட்டது. எங்கள் பிளாக்கில் பெய்யும் மழை நீர் முழுவதும் இதற்குள் செல்லும் வகையில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மழை நீரை நன்கு வடிகட்டும் வகையில், குழாயில் சல்லடை பொருத்தப்பட்டது. மழை நீர் அந்த வடிகால் அமைப்பில் இறங்கி ஆழ்துளை கிணறு குழாய் வழியாக பூமியில் இறங்கிவிடும். இதனால் நீரில் கடினத் தன்மை மேலும் குறையும்.

இந்தக் கட்டமைப்புகளுக்கு மொத்தத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. அதே நேரத்தில் குடிநீரை லாரிகளில் வாங்க மாதந்தோறும் பல ஆயிரங்களை செலவழிப்பதும், வாட்டர் ஃபில்டர் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் பல ஆயிரங்களை செலவழிப்பதும் தவிர்க்கப்பட்டது.

செடிமென்ட் தொட்டியில் தண்ணீரின் அளவு குறையும்போது பம்ப் தானாக இயங்கவும், தண்ணீர் நிரம்பியவுடன் தானாகவே அணையவும் தேவையான அமைப்பும் மிகக் குறைந்த செலவில் வடிவமைத்து பொருத்தியுள்ளேன். இதனால் தண்ணீரின் அளவை அடிக்கடி பரிசோதித்து பம்ப்பை இயக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நடேசன் கூறினார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. தேவைப்படுவோருக்கு முற்றிலும் இலவசமாக சேவை செய்ய தயாராக இருக்கிறேன் (செல்: 9444907316). வயது, உடல்நிலை காரணமாக நேரடியாக வர முடியாது என்றாலும் உதவி தேவைப்படுபவர்கள் என்னிடம் வந்தால், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை சொல்வேன். மேலும் எந்தெந்தப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற வழிமுறைகளையும் சொல்லிக் கொடுப்பேன் என்கிறார் நடேசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x