ஆன்லைன் விற்பனையில் 12 ஐபோன்கள் திருட்டு: பணியாளர் கைது

ஆன்லைன் விற்பனையில் 12 ஐபோன்கள் திருட்டு: பணியாளர் கைது
Updated on
1 min read

ஆன்லைன் விற்பனை மூலம் 12 ஐபோன்களை திருடிய பணியாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாதவரம் ஜி.என்.டி சாலையில் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பண்டக சாலை உள்ளது. இங்கு நவீன்(21) என்பவர் புதுவண்ணாரப்பேட்டை பகுதி டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார். இவர் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் வெவ்வேறு நபர்களின் பெயரில் போலியான முகவரி கொடுத்து 12 ஆப்பிள் ஐபோன்களை ஆர்டர் செய்துள்ளார். போலியான முகவரிக்கு வந்த ஐபோன் பார்சல்களை உடைத்து அதிலிருந்து போனை எடுத்துவிட்டு, போலியான ஐபோனை வைத்து பேக்கிங் செய்துள்ளார்.

பின்பு ஐபோன் போலியானது என்று கூறி வாடிக்கையாளர்கள் வாங்க மறுத்துவிட்டதாக ஐபோன் பார்சல்களை தாம் வேலை செய்யும் மாதவரம் ப்ளிப்கார்ட் பண்டக சாலையில் திரும்ப ஒப்படைத்துள்ளார். பண்டக சாலை பணியாளர்கள் ஐபோன் பார்சல்களை தங்களது டெல்லி தலைமையகத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். பார்சல்களை சோதனை செய்த டெல்லி ப்ளிப்கார்ட் பணியாளர்கள் தங்களது பதிவேடுகளை பரிசோதனை செய்தபோது தாங்கள் அனுப்பி வைத்த ஐபோனுக்கும், திரும்ப வந்த பார்சலில் உள்ள ஐபோனுக்கும் வேறுபாடு உள்ளதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து மாதவரம் ப்ளிப்கார்ட் பண்டக சாலை பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாதவரம் ப்ளிப்கார்ட் பண்டக சாலை பொறுப்பாளர் வெற்றிசெல்வன்(30), மாதவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் புதுவண்ணாரப்பேட்டை டெலிவரி மேன் நவீன், மோசடி செய்தது தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த 12 ஆப்பிள் ஐபோன்களும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட நவீன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in