Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM

கலங்கடிக்கும் கொள்ளையர்கள்.. காட்டிக்கொடுக்கும் கேமராக்கள்

வர்த்தக நிறுவனங்களிலும் அடுக்ககங்களிலும் கட்டாயம் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என்று மதுரை காவல்துறை ஆணையாளர் சஞ்சய் மாத்தூர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். அப்போது ‘சி.சி.டி.வி கேமரா கம்பெனிக்காரர்களுக்கு வியாபார பெருக்கம் செய்கிறாரா ஆணையாளர்?’ என்று சிலர் விமர்சித்தார்கள். ஆனால் இப்போது, மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு குற்றங்களில் சி.சி.டி.வி கேமராதான் குற்றவாளிகளை காவல்துறைக்கு அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறது.

கடந்த திங்கள் இரவு மேலூர் அருகே புதுச்சுக்காம்பட்டியில் அ.தி.மு.க பிரமுகரான பாஸ்கரனை அவரது வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டப் பாய்ந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள், மர்ம நபரை அடித்துத் துரத்தி இருக்கிறார்கள். பாஸ்கரன் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்தக் காட்சிகள் அப்படியே பதிவாகி இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு குற்றவாளியைத் தேடிக் கொண்டிருக்கிறது காவல்துறை.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மதுரை அண்ணா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த வடக்கத்தி பொடியன்கள் இருவர் உஷாராக, அங்கிருந்த மூன்று கேமராக்களை உடைத்திருக்கிறார்கள். விலையுயர்ந்த சாக்லேட்கள் இருக்கும் பகுதிக்கு சென்றவர்கள் சாக்லேட் மயக்கத்தில் அங்கிருந்த இன்னொரு கேமராவை கவனிக்கவில்லை. கிடைத்ததை சுருட்டிக் கொண்டு கிளம்பும் சிறுவர்கள், தாங்கள் நடமாடிய இடங்களில் எல்லாம் கோழி முட்டையை உடைத்து ஊற்றி அதன் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டுப் போகிறார்கள். போலீஸ் மோப்ப நாயை திசை திருப்புவதற்காக இப்படியாம்! இவை அனைத்தும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதேபோல் காரைக்குடியிலும் ஒரு சூப்பர்மார்க்கெட்டில் பொடியன்கள் பாத்ரூமிற்குள் ஒளிந்திருந்து கடை மூடியதும் கைவரிசை காட்டியபோது காவல்துறையிடம் சிக்கினார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிப்பட்டியில் ஏ.டி.எம். சென்டருக்குள் புகுந்த கொள்ளையர்கள் இருவர், அங்கிருந்த சி.சி.டிவி. கேமராவை கடப்பாரையால் உடைத்து, ஏ.டி.எம். மெஷினை உடைக்க முயன்றார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு, குமரி மாவட்டம் தக்கலையில் பூட்டிக் கிடந்த வீட்டுக் கதவின் ஏழு லாக்குகளையும் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் லிவரால் லாவகமாய் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன், அங்கிருந்த வைர நகைகள் உள்பட சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்தான். இவை அனைத்தும் வீட்டின் முகப்பிலிருந்த கேமராவில் பதிவாகி இருந்ததால் அந்த கேரள கொள்ளையனை கைது செய்து பொருட்களையும் மீட்டது காவல்துறை.

இதேபோல், மதுரை மற்றும் நெல்லையில் டூ-வீலர் ஷோரும்களில் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையனையும் காட்டிக் கொடுத்தது கேமரா தான்! ஜூன் 26-ம் தேதி மதுரை நேதாஜி ரோட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான பால்கடை சுரேஷ்குமார் என்பவரை முஸ்லிம் தீவிரவாதிகள் துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்றார்கள். இதிலும் கொலையாளிகளைக் காட்டிக் கொடுத்தது போலீஸ் கண்காணிப்புக் கேமராதான்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர், “முன்பெல்லாம் செல்போன் டவர்கள் மூலமாக குற்றவாளிகளை தேடுவோம். இப்போதெல்லாம் சி.சி.டி.வி கேமராதான் கைகொடுக்கிறது. தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சிகளுக்கு ஆள் இல்லா விமானங்களில் கேமராக்களை வைத்து வன்முறையாளர்களை கண்காணித்தோம். சென்னையில் மக்கள் திரளாக கூடும் நிகழ்ச்சிகளில் ராட்சத பலூன்களுக்குள் கேமராக்களை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கிறது காவல்துறை.

மதுரையில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு தீவிரவாதிகள் வந்துபோவதாக அடிக்கடி தகவல்கள் வரும். இதை உறுதி செய்வதற்காக காவல்துறை அங்கே போவதால் அடிக்கடி அங்கே பிரச்சனை வரும். இதனால், வழிபாட்டுத் தலத்தை நிர்வாகம் செய்பவர்களே அங்கு சி.சி.டி.வி கேமராவை வைத்துவிட்டார்கள். இதற்கு, புனிதம் கெட்டுவிட்டதாக அவர்களுக்குள்ளேயே ஒரு தரப்பினர் பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல் தனியார் வீடுகளில் சி.சி.டி.வி கேமரா வைப்பதிலும் சில சங்கடங்கள் இருக்கிறது. வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் வேற்று ஆண்கள் வந்து போனால் அதை வைத்து குடும்பத்தில் தேவையில்லாத சர்ச்சைகளும் சச்சரவுகளும் வெடிக்கின்றன. இதற்காக வீடுகளில் கேமராக்களை வைக்க தயங்குகிறார்கள். ஆனால், அனைத்து வீடுகளிலும் சி.சி.டி.வி கேமராக்களை வைத்துவிட்டால் எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது’’ என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x