

கோயம்பேடு சந்தைக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சந்தை முழுவதும் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடி யாக புகார் அளிக்கும் செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வந்தது. அதில், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது. உடனே போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் கோயம்பேடு பேருந்து நிலையம், சந்தையில் சோதனை செய்தனர். நள்ளிரவில் தொடங்கிய சோதனை காலை 4 மணி வரை நீடித்தது. ஆனால் சந்தேகப்படும் விதத்தில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் குறுந்தகவல் வந்த எண்ணை வைத்து அந்த நபரைப் பிடிக்கும் முயற்சி யில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கோயம் பேடு சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின்போது வியாபாரம் நிறுத்தப்பட்டதால் பொருட்கள் வாங்க வந்தவர்கள் அவதியுற்றனர்.