Last Updated : 01 Mar, 2014 12:00 AM

 

Published : 01 Mar 2014 12:00 AM
Last Updated : 01 Mar 2014 12:00 AM

துப்புரவு வாகனங்களை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்க முடிவு

நகராட்சிக்கு சொந்தமான துப்புரவு வாகனங்களை செயற்கைக் கோள் உதவியுடன் கண்காணிக்கும், வாகன கண்காணிப்பு முறை (Vehicle Tracking System) செயல்படுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் நகராட்சி 10.75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 1.30 லட்சம் பேர் வசிக்கின்றனர். 25 ஆயிரம் வீடுகளும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. தினமும் நாள் ஒன்றுக்கு 30 டன் குப்பைகள் சேருகின்றன.

இந்தக் குப்பைகளை சேகரிப்பதற்காக நகராட்சி சார்பில் ஐந்து லாரிகளும், 2 காம்ப்பாக்டர் மற்றும் ஒரு டப்பர் பிளேசர் வாகனங்கள் உள்ளன.

மேலும், துப்புரவுப் பணியை மேற்கொள்ள நகராட்சி ஊழியர்கள் 67 பேரும், தனியார் ஊழியர்கள் 50 பேரும் உள்ளனர்.

சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஐவேலி அகரம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நகராட்சிக் குப்பைக் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன.

செயற்கைக் கோள் கண்காணிப்பு குறித்து, நகராட்சித் தலைவர் பாஸ்கரன் கூறியதாவது:

நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் மட்டுமின்றி தனியார் வாகனங்களும் ஈடுபடுத்தப்படுவதால் கண்காணிப்பதில் சிரமம் இருந்தது. இதனால், சில இடங்களில் குப்பைகளை விரைவாக அகற்ற முடிவதில்லை.

ஜிபிஆர்எஸ் கருவியைப் பொருத்துவதன் மூலம் துப்புரவுப்பணிகளை ஊழியர்கள் குறித்த நேரத்தில் சரியாகச் செய்கிறார்களா என்பதை கண்காணிக்க முடியும்.

இதன் மூலம், ஊழியர்கள் தவறு செய்வது தடுக்கப்படும். மேலும், ஒவ்வொரு துப்புரவு வாகனமும் நாள் ஒன்றுக்கு எத்தனை நடை குப்பைகளை எடுத்துச் செல்கின்றன என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

இதன் மூலம், வாகனங்களுக்கான எரிபொருள், செலவு மற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியவை விரயமாவது தடுக்கப்படும். செயற்கைக்கோள் உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ள இந்தக் கண்காணிப்பு பணிகளைச் செய்வதற்காக, நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்படும். அங்குள்ள கணினியுடன் இந்த வாகனங்களில்

பொருத்தப்படும் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் இணைக்கப்படும். இதற்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இத்திட்டம் முழு வீச்சில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x