

ஆதார் இணைப்பு விடுபட்டவர்கள் வீடுகளில் ஆய்வு, உள்தாள் ஒட்டுதல், பொங்கல் பரிசு தொகுப்பு என பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் நியாய விலைக்கடை ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகள் சார்பில் 25 ஆயிரத்து 532 முழு நேரம் மற்றும் 9 ஆயிரத்து 154 பகுதி நேரம் என 34 ஆயிரத்து 686 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கடைகளின் மூலம், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள், 10 லட்சத்து 79 ஆயிரத்து 387 சர்க்கரை விருப்ப அட்டைகள், 66 ஆயிரத்து 478 காவலர் அட்டைகள் என 2 கோடியே 2 லட்சத்து 99 ஆயிரத்து 217 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தாமதமாகும் ஸ்மார்ட் கார்டு
தமிழகத்தில் தற்போது புழக் கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் கடந்த 2009-ம் ஆண்டே காலாவதி யாகிவிட்டதால், தொடர்ந்து உள் தாள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளுக்குப் பதில் மின்னணு குடும்ப அட்டைகள்(ஸ்மார்ட் கார்டு) வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்வைப்பிங் இயந்திரத்தில் (பாயின்ட் ஆப் சேல்) ஆதார் இணைக்கப்படுகிறது. இப்பணி களை கடை ஊழியர்கள் செய்து வருகின்றனர். இது கடந்தாண்டே முடிந்து, ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் முடியவில்லை.
எனவே, தற்போது ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படுகிறது. இதுதவிர பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு சார்பில், அரிசி விருப்ப அட்டை மற்றும் காவலர் அட்டைகளுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இவையும் நியாய விலைக் கடை கள் மூலம் பொங்கலுக்கு முன்ன தாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர, இலவச வேட்டி சேலையும் நியாய விலைக் கடைகளிலேயே, அங்குள்ள பட்டியல்படியே வழங் கப்படுகிறது.
இதனால், ஒரே நேரத்தில் இத் தனைப் பணிகளா என நியாய விலைக்கடை ஊழியர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
காலை 8 மணியிலிருந்தே...
இது தொடர்பாக, நியாய விலைக்கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது:
கடையில் பொருட்களை சரியாக இறக்கி, அதற்கான கூலியை கொடுக்க வேண்டும். ‘பாயின்ட் ஆப் சேல்’ இயந்திரம் கொடுக் கப்பட்டுள்ளது. அதில் ஆதார் விவரங்களைக் கேட்டு பதிவு செய்ய வேண்டும். கைபேசி செயலி இருந்தாலும் பொதுமக்கள் கடைக்குத்தான் வருகின்றனர். இதில், தற்போது ஆதார் இணைக் காமல் விடுபட்டவர்கள் யார் என்பதை பார்த்து, அவர்களின் வீடுகளுக்கு சென்று நாங்களே நேரடியாக ஆய்வு செய்ய வேண் டும் என அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
இதுதவிர உள்தாள் ஒட்டும் பணியை தொடங்கி யுள்ளோம். அடுத்ததாக பொங்கல் பரிசு வழங்க வேண்டும். காலையில் 8 மணிக்கு கடையை திறந்து, 12 மணி வரை பொருட்களை வழங்குகிறோம். 12 மணியிலிருந்து 3 மணி வரை வீடு வீடாக சென்று ஆய்வு செய்துவிட்டு, 3 மணி முதல் 7 மணிவரை மீண்டும் கடையில் உள்தாள் ஒட்டும் பணியை செய் கிறோம்.
தவறு நடந்தால் நடவடிக்கை
உள்தாள் ஒட்டும் பணியை 8-ம் தேதிக்குள் முடித்து, 10-ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்கும். இதற்கிடையில் ஆதார் ஆய்வுப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை என்றும் எச்சரித்துள்ளனர். இவ்வாறாக பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அழுத்தத்துடன் பணியாற்றுகிறோம். கூடுதலாக ஆள் வைத்தால் எங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதனால், நாங்களே சமாளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊழியர் பற்றாக்குறை
நியாய விலைக்கடைகள் மூலம் 2.3 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொருட்களை வழங்கும் உணவு, கூட்டுறவுத் துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் வி.முத்தையா கூறியதாவது:
மாதம் ரூ.8 ஆயிரம் முதல், 10 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் நியாய விலைக்கடை ஊழியர்கள், தொடர் பணிகளால் மன நோயாளிகளாகவே மாறிவிட்டனர். பணி போய்விட்டால், குறைந்த வருமானமும் கிடைக்காதே என்பதால் பலரும் கடும் மனஉளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது வடசென்னையில் உள்ள 280 டியுசிஎஸ் கடைகளில் 200-ல், ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அவர்தான் பில் போட வேண்டும், அவர்தான் பொருளையும் எடையிட்டு வழங்க வேண்டும்.
இதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில், 30 சதவீதம் அளவுக்கு பணியாளர் பற்றாக்குறை உள்ளது. இதனால், ஒரு கடையில் உள்ள பணியாளரே, அதே பகுதியில் உள்ள 2 கடைகளையும் சேர்த்து பார்க்கும் நிலை உள்ளது. இங்குள்ள சூழலைப் பார்க்கும் எவரும் இப்பணிக்கு வருவதே இல்லை. குடும்ப அட்டையை கள ஆய்வு செய்து வழங்கியுள்ள வழங் கல் அதிகாரிகள், அதில் உள்ள போலிகளைக் கண்டறிய நியாய விலைக்கடை ஊழியர்களைப் பணியமர்த்துவதும், தவறு இருந்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் எந்த வகையில் நியாயம்?
இது தவிர பொருட்கள் எடை குறைந்தால் அதிகளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், மிகுந்த மன அழுத்தத்தில் ஊழியர்கள் உள்ளனர். அவர்களது பிரச்சினையை தீர்க்க வேண்டியது துறையின் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.