

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,732 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.3,628 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைக் கல்வி நிலைகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதத் தையும் தொடர்ந்து பயில்வோரின் எண்ணிக் கையையும் உயர்த்த அரசு பல்வேறு புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வித் தரத்தை குறிப்பாக மொழித் திறனையும், கணிதத் திறனையும் மேம்படுத்த முழு கவனம் செலுத்தப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி அளித்திட, 2014-15ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு தேவைகளை நிறைவு செய்ய நபார்டு வங்கி நிதியுதவி மூலம் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சிறப்பு ஊக்கத்தொகை
மாநில அரசின் பங்காக அனை வருக்கும் கல்வி திட்டத்துக்கு (எஸ்.எஸ்.ஏ.) ரூ.700 கோடியும் தேசிய இடைநிலை கல்வி திட்டத்துக்கு (ஆர்.எம்.எஸ்.ஏ.) ரூ.384.90 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை திட்டங்களுக்கு ரூ.381 கோடி வழங்கப்படும்.
உயர்கல்வி பயில்வோர் விகிதத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு. எனினும் 2011-12ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, தமிழகம் ஏற்கெனவே 38.2 சதவீத அளவை எட்டியுள்ளது. மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு கல்வி நிறுவனங்களில் 798 புதிய பாடப்பிரிவுகள் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு மானியமாக ரூ.979.32 கோடி வழங்கப்படும். வரும் நிதி ஆண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.3,627.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் தலைமுறை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்கும் திட்டத்துக்கு ரூ.585.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.சி., எம்பிசி மாணவருக்கு 10 கல்லூரி விடுதிகள்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்காக ரூ.236.32 கோடியும் விடுதி பராமரிப்பு, உணவு செலவுக்காக ரூ.85.83 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், 2014-15ம் நிதியாண்டில் ரூ.2.80 கோடியில் 10 கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே செயல்பட்டுவரும் 10 கல்லூரி விடுதிகளுக்கு ரூ.4.5 கோடி செலவில் கூடுதலாக தங்கும் வசதிகள் ஏற்படுத்தப்படும். ரூ.16 கோடி செலவில் புதிய கட்டிடங்களும் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
தமிழக ஐ.டி.ஐ நிலையங்களை நவீனமயமாக்க ரூ.50 கோடி
தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களை நவீனமயமாக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014-2015 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் உள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் ரூ50.89 கோடி செலவில், 10 புதிய அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் இந்த அரசால் தொடங்கப்பட்டுள்ளன. மாத உதவித் தொகையாக ரூ.500, மடிக்கணினிகள், மிதிவண்டிகள், சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைவு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை , தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த அரசு விரிவுபடுத்தியுள்ளது.
இந்த மாணவர்கள் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைப் பெறும் வகையில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியைப் பயன்படுத்தி, ரூ.50 கோடி செலவில் மாநிலத்தில் உள்ள அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும்.