Published : 07 Jan 2017 08:12 PM
Last Updated : 07 Jan 2017 08:12 PM

விவசாயிகள் மரணத்தை அமைச்சர்கள் கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது: முத்தரசன்

விவசாயிகள் மரணத்தை அமைச்சர்கள் கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 140 ஆண்டுகளில் என்றும் கண்டிராத அளவில் தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் இன்றியும், பருவமழைகள் பொய்த்ததன் காரணமாகவும் பயிர்கள் கருகி சாகின்றன.

விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்த நிலையில், அரசு மவுனமாக இருந்ததால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நேரிடை போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கடந்த டிசம்பர் 26 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்ற போது போராட்டத்தில் பங்கேற்ற மகாலிங்கம் என்ற விவசாயி சுருண்டுவிழுந்து இறந்து போனார்.

சடலத்துடன் போராட்டம் தொடர்ந்த நிலையில், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 30-ம் தேதி நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விவசாயிகள் சங்க, விவசாயத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர்களிடத்தில் வறட்சி பாதிப்புகள் குறித்தும், விவசாயிகள் தற்கொலை, மற்றும் அதிர்ச்சி மரணங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர்.

கவனமுடன் கேட்டறிந்த அமைச்சர்கள் நால்வரும் கோரிக்கைகள் குறித்து முதல்வருடன் கலந்து பேசி விரைவாக தீர்வு காண்போம் என்று அறிவித்தார்கள்

அதன் அடிப்படையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து மாவட்ட வாரியாக கணக்கு எடுப்பு நடத்திடக் கோரியும் வரும் 9-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும் படியும் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும், அதே போல் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராசனும், விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேட்டியளித்துள்ளனர்.

வறட்சியால் விவசாயிகள் இறப்பு என்பது பொய்யான, தவறான தகவல் என்றும் வயது முதிர்வு, நோய், உடல் உபாதைகள் போன்ற காரணங்களால் இறந்துள்ளனர் என்றும், எதிர்க்கட்சிகள் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்களின் கருத்து மிகத் தவறானது மட்டுமின்றி கண்டனத்திற்குரியதாகும். அமைச்சர்கள் இருவரும் அன்றாட நாளிதழ்களை தவறாமல் படிப்பதுடன், தொலைக்காட்சி செய்திகளையும் பார்த்திட வேண்டும்.

அவர்களது கட்சி நாளேட்டையும், தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துவிட்டு தாங்கள் அமைச்சர்களாக நீடிக்கிறோமா என்ற செய்திகளை மட்டும் பார்த்து மனம் திருப்தி அடையக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் .

இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ 25 ஆயிரமும், ஆண்டு முழுவதும் வேலை, தின ஊதியம் ரூ 400, பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்துசெய்தல், சென்ற ஆண்டு கொடுக்காமல் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கல், கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகை கொடுத்தல், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 4000-ம் பொங்கலுக்கு அரிசி, வெள்ளம், பருப்பு, கரும்பு இவைகளுடன் ரூ 500 ரொக்கம், விலையில்லா அரிசி மாதம் 30 கிலோ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துதான் போராட்டமும், அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தையும் நடைபெற்றது. என்பதனை இரு அமைச்சர்களுக்கும் நினைவூட்டுகின்றோம்.

முதல்வர், இரு அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டிப்பதுடன் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாய் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x