

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலம் அரசு ஆண்கள் மற் றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர்களில் 14 பேர் மருத்துவர்களாகி உள்ளனர்.
தங்களது பிள்ளைகளை மருத்துவராக்க வேண்டுமென்பது பெரும்பாலான பெற்றோர்களின் கனவாக இருக்கும். அவர்களில், பொருளாதார வசதி படைத்தோர் தனியார் பள்ளிகளில் சேர்த்து அதிக மதிப்பெண் பெற வைத்து மருத்துவராக படிக்க வைப்பது உண்டு. சிலர், பணத்தைக் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வைப்பதும் உண்டு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்தையே பிரதானமாக கொண்டுள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆண் கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 7 ஆண்டு களில் படித்தோரில் 14 பேர் மருத் துவர்களாகி இருப்பது வியக்க வைத்துள்ளது.
கடந்த 2008-க்குப் பிறகு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பி.மங்கையர்க்கரசி, ஆர்.நித்யா, சோபியா, எஸ்.பிரி யங்கா, பி.ரசிதா, பி.ஷாலினி, டி.யமுனா ஆகியோர் தற்போது மருத்துவர்களாக உள்ளனர்.
இதேபோல, அரசு ஆண்கள் பள்ளியில் படித்த எஸ்.சிவ பாரதி, எம்.பார்த்திபதாசன், கே.தினேஷ்குமார், அம்சத்குமார், சிங்காரவடிவேலன், குமரேசன், ராமானுஜம் ஆகியோர் தற்போது மருத்துவர்களாக உள்ளனர். இதில், ஒருவர் பல் மருத்துவர், 2 பேர் கால்நடை மருத்துவர். இது மட்டுமின்றி பலர் அரசு பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரிகளிலும் படிக்கின்றனர்.
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த வே.அருணாசலம் கூறும்போது, “2 அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களும் மாணவர்களுக்காக கடுமையாக உழைக்கின்றனர். வெற்றி பெறும் மாணவர்களையும், அவர்களுக்காக உழைத்த ஆசிரியர்களையும் கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கொத்தமங்கலம் அரசுப் பள்ளிகளில் படிப்போர் அதிக மதிப்பெண் பெறுவதால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க் கையும் அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 14 மருத்துவர்கள் வேறு எந்த அரசுப் பள்ளிகளிலும் உருவாகவில்லை” என்றார்.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே புதுக்கோட்டை மாவட்டம் கல்வியில் முன்னேறி வருகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் 23-வது இடத்தில் இருந்து 19-வது இடத்துக்கும், பிளஸ் 2 தேர்வில் 22-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கும் புதுக்கோட்டை மாவட்டம் முன்னேறி உள்ளது. கொத்தமங்கலம் அரசுப் பள்ளி களின் செயல்பாடு பாராட்டுக் குரியது” என்றனர்.