

விருதுநகர் அருகே பொதுமக்களுடன் இணைந்து ஊர் குளத்தை இளைஞர்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ளது சத்திரரெட்டியபட்டி கிராமம். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஒரு காலத்தில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் இன்றி, சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் தண்ணீர் வழங்கி தாகம் தீர்த்தது சத்திரரெட்டியபட்டி. இங்கு உள்ள பொதுக் கிணறு எப்போதுமே வற்றாமல் சுரந்துகொண்டே இருந்தது. இதனால், எப்போதுமே இக்கிராம மக்கள் வறட்சியைக் கண்டதில்லை. சத்திரரெட்டியபட்டியில் உள்ள பாறைக்குளம் கண்மாயில் நீர் நிரம்பி அது வடிகால் வழியாக ஊர் நடுவில் உள்ள நீர்பாவி குளத்தை நிரப்பி வந்தது. இதனால், ஊர் கிணற்றிலும் குடிநீர் வற்றாமல் இருந்து வந்தது. ஆனால், சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், வறட்சியாலும் நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன. இதில், சத்திரரெட்டியபட்டியும் தப்பவில்லை.
போதிய மழை இல்லாததால் பாறைக்குளம் கண்மாய் வறண்டது. இதனால், நீர்பாவிக் குளமும், ஊர் பொதுக் கிணறும் வறண்டன. மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஊர் மக்களும், கிராமப்புற பசுமை இளைஞர் நற்பணி மன்றமும் கைகோர்த்தது. அதன் பயனாக ஊர் பொதுக் கிணறு, கடந்த சில நாள்களுக்கு முன் இளைஞர்களால் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. இதனால் கிணற்றில் தற்போது ஊற்று ஏற்பட்டு போதிய நீர் கிடைக்கிறது.
அதைத் தொடர்ந்து, பாறைக்குளம் கண்மாயிலிருந்து நீர்பாவி குளத்திற்கு வரும் நீர் வழிப்பாதை சுத்தம் செய்யப்பட்டது. தற்போது, கிராம பசுமை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீர்பாவி குளத்தை நேற்று சுத்தம் செய்தனர். ஏராளமான இளைஞர்கள், பெரியவர்கள் குளத்திற்குள் இறங்கி அங்கிருந்த முட்புதர்களை அகற்றினர். பொக்லைன் இயந்திரம் மூலம் குளம் ஆழப்படுத்தப்பட்டது. இதுகுறித்து, சத்திரரெட்டியபட்டி இளைஞர்கள் கூறுகையில், குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்துவதைத் தொடர்ந்து குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.