

கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களை பாதுகாக்க இரு மாநில முதல்வர்களை உடனே அழைத்து பேச வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "கர்னாடகாவில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுகின்றனர், தமிழக வாகனங்களும், உடமைகளும் தாக்குதலுக்குள்ளாகின்றன.
இதுமாதிரி எல்லாம் பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்த்துதான் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து ஒரு சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கர்நாடக முதலமைச்சரோடு கலந்து பேச வேண்டும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார்.
இப்போதாவது காலம் தாழ்த்தாமல் கர்நாடக மாநிலத்திலே இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அவல நிலையிலிருந்து அங்கு இருக்கக் கூடிய தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், மத்தியிலே இருக்கக்கூடிய அரசு, குறிப்பாக பிரதமராக இருக்கக்கூடிய மோடி உடனடியாக இதில் தலையிட்டு ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனவே விரைவாக கர்நாடகா மற்றும் தமிழக முதலமைச்சர்களை அழைத்துப் பேசி ஒரு நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கனவே உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அந்த தீர்ப்பை உடனடியாக அங்கிருக்கக்கூடிய மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்.
அதை நிறைவேற்ற வைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு மத்திய அரசிற்கு உண்டு. தேவைப்பட்டால் ராணுவத்தை துணைக்கு அழைத்து, தண்ணீரை முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்கிடும் முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கு உண்டு.
அந்தப்பணியை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டு மாநில முதலமைச்சர்களை அழைத்து பேச வைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கு உண்டு. குறிப்பாக பிரதமருக்கு உண்டு.
உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கின்ற போது அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கர்நாடக மாநில அரசுக்கும் உண்டு, குறிப்பாக மத்திய அரசுக்கும் உண்டு" என்றார்.