வெயில் அளவு - வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன்

வெயில் அளவு - வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன்
Updated on
1 min read

சென்னையில் இன்று 45 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என வாட்ஸ்அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அவரது முகநூல் நிலைத்தகவல் பின்வருமாறு:

சென்னையில் இன்று 45 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என வாட்ஸ்அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்

சென்னையில் இன்றைய தினம் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டுவதே கடினம். நேற்றையதினம் போலவே காலை 11.30 மணியளவில் கடற்காற்று வீசத்தொடங்கும். இதனால், 45 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் 40 டிகிரியை வெப்பம் தாண்டாவிட்டாலும் அனல்காற்று வீசும்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள அனல் காற்று எச்சரிக்கையை 45 டிகிரி செல்சியஸ் வெயில் என தவறாக திரித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பாதீர். அத்தகைய வாட்ஸ் அப் தகவல்களைப் பகிரவும் செய்யாதீர்.

40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் வாட்டினால் என்ன செய்யலாம்?

சென்னை நகரைப் பொறுத்தவரையில் உள்பகுதிகளில் இன்று வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். மாநிலத்தின் உள் மாவட்டங்களிலும் வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னையில் கடலில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும் பகுதிகளில் இன்று 40 டிகிரி செல்சியஸுக்கும் சற்று அதிகமாகவே வெயில் இருக்கும். எனவே, வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லவும். தொப்பியை மறக்க வேண்டாம். சூரிய வெப்பம் நேரடியாக தலையில் விழும்படி வெளியே செல்ல வேண்டாம். அப்படிச் சென்றால் நீர்ச்சத்து இழப்பு நிச்சயம் ஏற்படும். இந்த முன்னேற்பாடுகளே போதுமானது. இதற்கு மேலும் பயம் கொள்ள அவசியம் இல்லை.

சென்னையில் இதுவரை அதிகபட்சமாக கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 45 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. அதன்பின்னர் அத்தகைய அளவு வெயில் அடிக்கவில்லை. இப்போதைக்கு 45 டிகிரியில் இருந்து 48 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்ற வதந்தியைப் பரப்பாதீர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in