Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் பஸ்களை கண்காணிக்கத் திட்டம்

பத்து லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் இயக்கப்படும் பஸ்களை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநில திட்டக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் மருத்துவ மாணவியை பஸ்சில் 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து, மக்கள் தொகை அதிகமாகவுள்ள பெரிய நகரங்களில் இயக்கப்படும் பஸ்களின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட நகரத்தில் இயக்கப்படும் பஸ்களை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் (வாகன நகர்வு கண்காணிப்பு) மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பஸ்சிலும் கட்டாயம் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படவுள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம் பஸ்களை கண்காணிக்க ஒவ்வொரு நகரத்திலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கவுள்ளது. இதற்கான நிதி மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் மூலம் அளிக்கப்படவுள்ளது. இதற்காக மாநிலங்களில் உள்ள திட்டக் குழுக்களுடன் ஆலோசனையை தொடங்கவுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறும் போது, ‘‘பெண்களுக்கு பஸ்களில் போதிய அளவில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இயக்கப்படும் பஸ்களில் கண்ணாடிகளில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளோம்.மேலும், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளோம். பெரிய நகரங்களில் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் கட்டாயம் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தி கண்காணிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். இத்திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களில் இருக்கும் திட்டக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x