

ஸ்ரீராமானுஜரின் 1,000-வது ஆண்டை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் அருகே 216 அடி உயரத்துக்கு ராமானுஜரின் பிரம்மாண்ட ஐம்பொன் சிலை அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் ஸ்ரீமன் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிஜி நேற்று கூறியதாவது:
‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்ற சமத்துவக் கொள்கை கொண்டவர் ராமானுஜர். பகுத்தறிவு சிந்தனைகள் ஏற்படாத 1,000 ஆண்டுகளுக்கு முன்பே அவர் சமத்துவக் கொள்கை கொண்டிருந்தார். சமத்துவம் பற்றி கூறியதோடு, தன் வாழ்விலும் அதை கடைப்பிடித்து ஒற்றுமையின் திருவுருவாக விளங்கினார். அவரது 1,000-வது ஆண்டைக் கொண்டாடுவதும், ஆண்டாண்டு காலத்துக்கு அவரது புகழை நிலைத்திருக்கச் செய்வதும் நமது கடமை.
இதை கருத்தில் கொண்டு, ஹைதராபாத் புறநகர் பகுதியான ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு அருகில் ஸ்ரீராமபுரம் என்ற இடத்தில் 216 அடி உயரத்துக்கு ராமானுஜரின் ஐம்பொன் திருவுருவ சிலை நிறுவ தீர்மானித்தோம். அதற்கான முதல்கட்ட பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கின. சிலையை வடிவமைக்க சீனாவை சேர்ந்த நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
ராமானுஜரின் பிரம்மாண்ட ஐம்பொன் சிலை அமைய உள்ள வளாகத்தில் 108 திவ்ய தேசங்களின் மாதிரிகளையும் அமைக்க உள்ளோம். ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் காட்சிக் கூடமும் அமைய உள்ளது. சுமார் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள இந்த வளாகத்தின் முதல்கட்ட பணிகள் 2017 இறுதிக்குள் நிறைவடையும். அனைத்து பணிகளும் 5 ஆண்டுக் குள் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.