Published : 08 May 2017 09:30 AM
Last Updated : 08 May 2017 09:30 AM

செய்வன திருந்தச் செய்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி நிச்சயம்: ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டும் நிகழ்ச்சியில் அறிவுரை

‘‘மாணவ, மாணவிகள் செய்வன திருந்த செய்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் நிச்சயம் வெற்றிபெற முடியும்” என்று, கொச்சியிலுள்ள கேரள மாநில கூட்டுறவு விற்பனை முகமை நிறுவன நிர்வாக இயக்குநர் பி.மைக்கேல் வேதசிரோமணி தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில், ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற, சிவில் சர்வீஸ் தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில், ஐஏஎஸ் அதிகாரி மைக்கேல் வேதசிரோமணி பேசிய தாவது:

ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கவும், அதில் தேர்ச்சி பெறவும் ஒவ்வொரு மாணவருக்கும் அவரது குடும்பத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத் தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். கல்லூரி பருவத்திலேயே இதற்கு அடித்தளமிட வேண்டும்.

மாதிரி தேர்வில் நீங்களே விடைகளை எழுதிப்பார்த்து, அதை படித்துப் பார்த்தால் முன்னேற்றம் காணலாம். தினசரி செய்தித்தாள்கள், ஆங்கில அகராதி, அறிவுசார்ந்த புத்தகங்களை முழு கவனத்துடன் படித்து, உங்களை முழு தகுதியுள்ளவர்களாக மாற்ற வேண்டும். செய்வன திருந்தச் செய்தால் ஐஏஎஸ் தேர்வில் நிச்சயம் வெற்றிபெற முடியும்.இவ்வாறு பி.மைக்கேல் வேதசிரோமணி பேசினார்.

மு.கருணாகரன்

நிகழ்ச்சியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் பேசியதாவது:

புதிய சினிமா வெளியாகும்போது தியேட்டரில் இளைஞர்கள் கூட்டத்தை பார்க்கலாம். திருமண மண்டபம், திருவிழாக்களிலும் கூட்டங்களை அதிகம் காணலாம். ஆனால், இங்கே ஆண்களும், பெண்களும் பெரும் கூட்டமாக வந்திருப் பதைப் பார்க்கும்போது, எனக்குள் புதிய ஊக்கம் ஏற்படுகிறது. ஐஏஎஸ் தேர்வு என்பது கடல் போன்றது. அதில் முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்ட தேர்வுகள் உள்ளன. இத்தேர்வை எழுதுபவர்களில் 75 சதவீதம் பேர், ஏதோ எழுதுகிறோம் என குறிக்கோள் இல்லாமல் எழுதுகின்றனர். அவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம்.

ஐஏஎஸ் தேர்வு மாதிரி கேள்வித் தாள்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். பாடத்தில் எந்தப் பகுதியில் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதை அறிந்து, அந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் உயரிய குறிக்கோளை ஏற்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் திட்டமிட்டு கடினமாக உழைக்க வேண்டும். நிச்சயம் வெற்றி பெறலாம். இவ்வாறு ஆட்சியர் மு.கருணாகரன் பேசினார்.

மணிகண்டன்

போட்டித் தேர்வு பயிற்சியாளர் ஆ.மணிகண்டன் பேசியதாவது:

ஐஏஎஸ் தேர்வு எழுத பொருளாதாரம் தடையல்ல. 21 வயது நிரம்பியவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம். எனவே, 21 வயதிலேயே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அப்படியானால் 25 வயதுக்குள் மாவட்ட ஆட்சியராகிவிடலாம். காலதாமதம் செய்வது நல்லது அல்ல.

21 வயதில் ஐஏஎஸ் தேர்வானால் ஓய்வு பெறும்போது கேபினட் செயலாளர் வரை பதவி உயர்ந்துவிடலாம். காலதாமதம் ஏற்படும்போது கடைசியாக நாம் தொடும் உச்ச பதவியின் அளவு குறையும்.

பயிற்சி மையங்களில் படித்தால் நுணுக் கங்களை கற்றுக்கொள்ளலாம். 10 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பிக்கின்றனர். 5 லட்சம் பேர் எழுதுகின்றனர். 15 ஆயிரம் பேர் மட்டுமே பிரதானத் தேர்வை எழுதத் தகுதி பெறுகின்றனர். இவர்களில் 3,000 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு செல்கின்றனர். அவர்களில் 1000 பேர்தான் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சிவில் சர்வீஸ் தேர்வில் 6 பாடங்கள் உள்ளன. அவற்றில் அதிக முக்கியமானவை எது என தெரிந்து, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு மொழி ஒரு தடையில்லை. தமிழில் நேர்முக தேர்வு வரை பங்கேற்கலாம். ஐஏஎஸ் தேர்வு தொடர்பாக தமிழில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. எனவே, தமிழில் எழுதினாலும் நிச்சயம் ஐஏஎஸ் ஆகலாம். எனவே, மொழியை பற்றி கவலைப்பட வேண்டாம்.

‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களை தவறாமல் படிக்க வேண்டும். இவ்வாறு மணிகண்டன் பேசினார்.

சாராள் தக்கர் கல்லூரி வேதியியல் துறை தலைவர் வி.ரமா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை, ‘தி இந்து’ தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் பெற்றோருடன் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு ஆகியவை வழங்கப்பட்டன. மதிய உணவும் வழங்கப்பட்டது. கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் திறனறித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 3 பேருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற 3 மாணவர்களுக்கு, இலவச பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்களை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வழங்கினார்.

6 12-ம் வகுப்பில் இருந்து கேள்விகள் : கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்ய பூமிநாதன்

மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வை எழுதும் போது உள்ள தைரியம், ஐஏஎஸ் தேர்வு எழுதும்போது இல்லை. பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். நடுத்தர மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரே ஐஏஎஸ் தேர்வுக்கு வருகிறார்கள்.

ஐஏஎஸ் தேர்வை எழுத கட்டணம் ஏதும் கிடையாது. ஊரக பகுதிகளில் இருந்து இத்தேர்வை எழுதி வெற்றிபெற்ற பலர் உள்ளனர். இத்தேர்வு எழுதுவோருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி இலவச பயிற்சி அளிக்கிறது. ஐஏஎஸ் முதல்நிலை தேர்வில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான பாடங்களில் இருந்துதான் 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழோடு இணைந்து நடத்தி வருகிறோம்.

லட்சியவாதிகளை ஒரு சமூகம் இழக்கலாகாது: ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ்

எந்த ஒரு சமூகத்தையும் உயிர்ப்போடு அதன் அடுத்தடுத்த தளங்கள் நோக்கி நகர்த்துவது அதன் லட்சியங்கள்தான். ஒரு சமூகத்தில் உள்ள அனைவருமே லட்சியவாதிகளாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், பொதுவான ஒரு லட்சியத்தை சமூகம் அடைகாக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கி வெவ்வேறு தளங்களில் ஒரு கூட்டம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக இளைய தலைமுறையினர். லட்சியவாதிகளை ஒரு சமூகம் இழக்கலாகாது.

இன்று நம் லட்சியம் என்ன? அப்படி ஏதேனும் ஒன்று நமக்கு இருக்கிறதா? பொது லட்சியம் இல்லாத ஒரு சமூகம் எப்படி அதிகாரத்தை கனவு காண இயலும்? காந்தியை, நேருவை, சாஸ்திரியை, அண்ணாவை படியுங்கள். எத்தனை பேரின் தியாகத்தினால் இங்கே அமர்ந்து இருக்கிறோம் என்பது புரிய வரும்.

நாட்டின் மிக உயரிய விழுமியங்கள் இன்று கேள்விக்குள்ளாகி இருக்கின்றன. பன்மைத்துவம் அடிவாங்குகிறது. நம் ஒவ்வொருவருக்கும் வரலாற்று பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை இளம் தலைமுறைக்கு கடத்தும் விதமாகவே, ‘தி இந்து’ இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. மாற்றமாவோம்.

‘தி இந்து’ நாளிதழும், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியும் இணைந்து, திருநெல்வேலியில் நடத்திய `உனக்குள் ஓர் ஐ.ஏ.எஸ்.’ நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்ற மாணவ, மாணவியர்.

படங்கள்: மு.லெட்சுமி அருண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x