Published : 10 Apr 2016 12:49 PM
Last Updated : 10 Apr 2016 12:49 PM

மக்கள் தேமுதிக உதயமானது: புதிய கட்சியைத் தொடங்கினார் சந்திரகுமார்

மக்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ள வி.சி.சந்திரகுமார், திமுக அழைத்தால் கூட்டணி அமைப்போம் என்று கூறியுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏ, துணை செயலாளர் தேனி முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்எல்ஏ மற்றும் 4 மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிருப்தி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை தி.நகரில் சந்திரகுமார் ஞாயிறன்று நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது மக்கள் தேமுதிக என்ற அமைப்பை தொடங்குவதாக சந்திரகுமார் அறிவித்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ம.ந.கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கக் கூடாது. அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவுடன்தான் கூட்டணி வைத்திருக்க வேண்டும். அதிமுக வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்க உருவாக்கப்பட்டதுதான் ம.ந.கூட்டணி. அந்தக் கூட்டணி பிடிக்காமல் தமாகா நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒருவர் விலகியுள்ளனர்.

வைகோவின் சூழ்ச்சி வலையில் பிரேமலதா விஜயகாந்த் விழுந்ததால், தேமுதிக - ம.ந.கூட்டணி உருவானது. நாங்கள் பணம் வாங்கியதாக தேமுதிக அலுவலகத்தில் நின்றுகொண்டு வைகோ கூறுகிறார். நாங்கள் வாங்கியிருப்போமா, இல்லையா என்று விஜயகாந்த் மனசாட்சிக்கு தெரியும்.

நான் உட்பட எங்கள் அணியில் உள்ளவர்கள் அனைவரும் எங்களது தாய் , மனைவி, மக்கள் மீது சத்தியம் செய்து சொல்கிறோம். ஒரு ரூபாய்கூட யாரிடமும் காசு வாங்கவில்லை. வைகோவால் இதேபோல சத்தியம் செய்து சொல்ல முடியுமா? நான் வைகோவுக்கு ஒரு சவால் விடுகிறேன். இன்னும் நிறைய எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எங்களுடன் வரவுள்ளனர். அவர்களுக்கு பணம் வாங்கிக் கொடுத்துவிட்டு அதற்கான புரோக்கர் கமிஷனை அவர் பெற்றுக் கொள்ளட்டும்.

திமுகவில் இருந்து வெளியேறியபோது அண்ணா அறிவாலயத்தை கைப்பற்றும் முயற்சியை வைகோ மேற்கொண்டார். அதுபோல கொடி, சின்னத்தை முடக்கும் கீழ்த்தரமான வேலைகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

கடந்த 2006 முதல் தற்போது வரை எனது சொத்துக் கணக்கு மட்டுமன்றி எனது உறவினர்களின் சொத்துக் கணக்கையும் வெளியிட தயாராக உள்ளேன். வைகோ அப்படி வெளியிடுவாரா? நாங்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ளோம் என்பதற்காக எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் வைகோ பேசுவதா? வைகோவின் மருமகன் ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.450 கோடியை ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

மக்கள் தேமுதிக என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளோம். எங்களுக்கு பின்னாலும் தொண்டர்கள் இருக்கிறார்கள். எங்களைப் பற்றி இனியும் வைகோ அவதூறு பேசினால், அவரை முற்றுகையிடுவோம். நாங்கள் ஆட்சி மாற்றத்துக்காக செயல்படுவோம்.

எங்களைப் பற்றி இனி யாரும் குறை சொல்லக் கூடாது. தேமுதிகவில் ஒருவர் ரூ.86 கோடிக்கு நிலம் வாங்கியுள்ளார். எங்களை சீண்டினால் சிங்கப்பூர், மும்பை, துபாய் போன்ற இடங்களில் பேசப்பட்ட விஷயங்களை வெளியிட நேரிடும். தேமுதிகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், தமிழக மக்களை ஒருங்கிணைப்பதுதான் எங்கள் திட்டம். திமுக அழைத்தால் அவர்களுடன் கூட்டணி பற்றி பேசுவோம். தேர்தலில் போட்டியிடும் சூழல் வந்தால் நாங்கள் போட்டியிடுவோம்.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

ரூ.750 கோடி கைமாறியதா?

தேமுதிக எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் பேசும்போது, ‘‘திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பதற்கு தேமுதிகவுக்கு ரூ.750 கோடி கைமாறியதாக கூறப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்தை ஒரு தொழிலதிபரின் மனைவி சந்தித்து பேசியதன் அடிப்படையில்தான் ம.ந.கூட்டணியில் தேமுதிக சேர்ந்துள்ளது’’ என்றார்.

‘சித்தியாக மாறிவிட்டார்’ - நீக்கப்பட்ட தேமுதிக வேலூர் மாவட்ட செயலாளர் கருத்து:

தேமுதிக-விலிருந்து நீக்கப்பட்ட வேலூர் மாவட்ட செயாலாளர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறிவிட்டார், அதனால்தான் மக்கள் தேமுதிக தொடங்கப்பட்டுள்ளது. அவர் எங்கள் கனவுக்கோட்டையைத் தகர்த்து விட்டார். நாங்கள் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை. கூட்டணி குறித்தே அதிருப்தி தெரிவித்தோம். இத்தனை நாட்களாக மனக்கஷ்டத்தோடுதான் இருந்தோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x