Last Updated : 14 Jan, 2014 12:00 AM

 

Published : 14 Jan 2014 12:00 AM
Last Updated : 14 Jan 2014 12:00 AM

பண்டிகைக் காலங்களில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: சென்னைக்கு விடிவுகாலம் எப்போது?

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சென்னையில் தொடர்ந்து கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யாததுதான் இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக கடந்த சனிக்கிழமை முதல் சென்னையில் உள்ள பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகி வருகின்றனர். இதனால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதற்கேற்ப சிறப்பு பஸ்களும் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன. பஸ்கள் தொடர்ச்சியாக புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கடந்த 2 நாட்களாக சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம், அண்ணாநகர், வளசரவாக்கம், மதுரவாயல், நெற்குன்றம், வான கரம், அம்பத்தூர் ஆகிய பகுதி களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வரும் சாலைகள் அனைத்திலும் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு அரசு மற்றும் தனியார் சார்பில் தினமும் 2000க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்னை கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்த பஸ்களும் குவிக்கப்படுவதால், குறுகிய சாலைகளில் வாகனங்கள் சிக்கி ஊர்ந்து செல்கின்றன. இதனால், வெளியூருக்கு செல்லும் மக்களும், அலுவலகம் சென்று வீடு திரும்பும் சென்னைவாசிகளும் கடுமையாக அவதிப்படுகின்றனர். முன்கூட்டியே போக்குவரத்து நெரிசலை குறைக்க எந்த திட்டமிடலும் இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு விடிவுகாலம் எப்போது என மக்களும் வாகன ஓட்டிகளும் புலம்புகின்றனர்.

இது தொடர்பாக பயணி ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளோம். இதற்கே 2 மணிநேரம் ஆகிவிட்டது. இப்போது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நாங்கள் செல்ல வேண்டும். எங்களின் பொழுது பஸ் பயணத்திலேயே கழிந்துவிடும் போல் இருக்கிறது. 2 நிமிடங்கள் பஸ் சென்றால், 10 நிமிடத்திற்கு நிற்கிறது. புறநகர் பகுதியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அப்படியே வெளியூருக்கு செல்லும் வகையில் புறநகர் பகுதியில் இருந்து பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும். இதனால், போக்குவரத்து நெரிசலும் குறையும்’’ என்றார்.

மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் இதுபற்றிக் கூறுகையில், “ கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே செல்ல எங்களுக்கு ஒதுக்கியுள்ள நேரம் வெறும் 40 நிமிடங்கள்தான். ஆனால், நாங்கள் இந்த நெரிசலை கடந்து செல்ல 1.30 மணிநேரம் ஆகிறது.

பஸ்சில் வரும் மக்கள் எங்களைத் திட்டுகிறார்கள். சரியான நேரத்திற்கு செல்லவில்லை என்றால் அதிகாரிகளும் எங்களைத் தான் திட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது?’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x