திரையரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்காத பெண்கள் கைது: கோஷ்டி மோதல் - 4 பேர் காயம்
திரையரங்கில் தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்ததாக 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் பிரபல வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில் நேற்று காலையில், உலக திரைப்பட விழாவுக்காக ஒரு படம் திரையிடப்பட்டது. திரைப்படத்துக்கு முன்னதாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது எல்லோரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்திய நிலையில், 2 பெண்கள் உட்பட 3 பேர் சீட்டிலேயே அமர்ந்து கொண்டு, மற்றவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இதை சில இளைஞர்கள் கண்டித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். இதனால் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வடபழனி போலீஸார் 6 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், தேசியகீதம் ஒலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்ய மறுத்ததாக விருகம்பாக்கத்தை சேர்ந்த சுப(53), அவரது மகள் ஷீலா(27), மற்றும் பிஜோன்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது தேசிய மரியாதை சட்டம் பிரிவு 3-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 3 பேரும் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கறிஞர் வி.சந்தியா கூறும்போது, “பலருக்கு தேசிய கீதத்தை முழுமையாக பாடக்கூடத் தெரியவில்லை. தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது என்பது நாம் நாட்டுக்கு கொடுக்கும் மரியாதை. இதைக்கூட அறியாமல் ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்று கேட்கின்றனர். எனவே, இளைஞர்கள் அதிகம் கூடும் திரையரங்கில் தேசிய கீதம் ஒலிக்க வைத்தது சரியான நீதிமன்ற தீர்ப்பு. மேலும், அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதத்தை கட்டாயமாக ஒலிக்க வைக்க வேண்டும் என்ற விதியையும் கொண்டுவர வேண்டும்” என்றார்.
வழக்கறிஞர் அஜிதா கூறியபோது, “ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்கள் செல்லும் இடத்தில் தேசிய கீதத்தை கட்டாயமாக்குவதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. முதலில் அரசு அலுவலகங்களிலும், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கூட்டங்களிலும் தேசிய கீதத்தை கட்டாயமாக்கியிருந்தால் ஓரளவு பயன் ஏற்பட்டிருக்கும்.
லஞ்சம், ஊழல், தண்ணீர் இல்லாமை, குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், வரி கட்டாமல் ஏமாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதில் கவனம் செலுத்தாமல், தேசப்பற்று என்ற பெயரில் மக்களை திசை திருப்பும் முயற்சியாகவே இது இருக்கிறது. பெரிய விஷயங்களை மூடிவிட்டு தேசப்பற்று என்கிற பெயரில் மக்களை ஏமாற்றவே அதிக முயற்சி எடுக்கின்றனர்” என்றார்.
