பெண்ணினத்தை அவமதித்த தயாசங்கர் சிங்கை பாஜக-விலிருந்தே நீக்க வேண்டும்: ஜெயலலிதா கண்டனம்

பெண்ணினத்தை அவமதித்த தயாசங்கர் சிங்கை பாஜக-விலிருந்தே நீக்க வேண்டும்: ஜெயலலிதா கண்டனம்
Updated on
1 min read

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களாலும், மற்றவர்களாலும் மதிக்கப்படுபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாயாவதி ஆவார். சமீபத்தில் குஜராத்தில் நடந்த நிகழ்வை கண்டித்து இவர் கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். அதன் காரணமாகவோ, என்னவோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக உள்ள தயாசங்கர் சிங் என்பவர் மிகவும் மோசமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் மாயாவதியைப் பற்றி விமர்சித்துள்ளார்.

அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. அதுவும் தயாசங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழுக்கை தேடித் தருவதாகவே இது உள்ளது.

அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் இது போன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. எனது அரசியல் வாழ்வில் இது போன்ற துன்பங்களை நான் அனுபவித்துள்ளேன். வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்ட மாயாவதியின்பால் எனது இதயம் கசிந்து உருகுகிறது. பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதல்கள் இத்துடனாவது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

தயாசங்கர் சிங்கின் விமர்சனத்திற்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வருத்தம் தெரிவித்திருப்பதும் பாரதிய ஜனதா கட்சி தயாசங்கர் சிங்கை உத்தரப் பிரேதச மாநில கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்துள்ளதும் ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த நடவடிக்கை போதுமானதல்ல. பெண்ணினத்தை அவமதித்த தயாசங்கர் சிங் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தே நீக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in