கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?- ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?- ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி
Updated on
2 min read

மதுவிலக்கில் அதிமுக அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது எனக் கூறும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டப்பேரவையில் பேசும்போது, 1971-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது எனக் கூறி 2007-ம் ஆண்டு பேரவையில் நான் பேசிய கருத்து ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மதுவிலக்கு விஷயத்தில் அதிமுக அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

1971, 2007-ம் ஆண்டுகளை நினைவுகூர்ந்த முதல்வர், 21-7-2015-ல் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை மறந்து விட்டார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி கடந்த 10-8-2015-ல் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதுவும் அவருக்கு தெரியவில்லை.

1971-ல் திமுக ஆட்சியில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது பேசிய நான், வேறு வழியில்லை என்பதால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை மதுவிலக்கை ஒத்திவைத்திருக்கிறோம் என குறிப்பிட்டேன்.

1971-ல் மதுவிலக்கை ரத்து செய்த திமுக அரசே 1974-ல் மதுவிலக்கை அமல்டுத்தியது. மதுக்கடைகளை மூடியது. அதனை நேற்று பேரவையில் பேசும்போது முதல்வர் மறைத்துவிட்டார். திமுக ஆட்சியில் கொண்டு ரத்து செய்யப்பட்ட மதுவிலக்கு, திமுக ஆட்சியிலேயே நடைமுறைக்கு வந்து விட்டது என்பதுதான் உண்மை.

1981-ல் முதல்வர் எம்ஜிஆர் கள், சாராய விற்பனைக்காக மதுவிலக்கை ரத்து செய்தார். அதன்பிறகு 2001-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மது ஒழிப்பு பிரகடனம் செய்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, மலிவு விலை மது விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டது.

2003-ல் முதல்வர் ஜெயலலிதா மது விற்பனைக்காக டாஸ்மாக் நிறுவனத்தை தொடங்கி மதுக்கடைகளை திறந்தார்.

1991-ல் திமுக ஆட்சியில் இருந்த மலிவு விலை மது திட்டத்தை, பாவகரமான காரியம் எனக்கூறி ரத்து செய்து முதல் கையெழுத்து என விளம்பரம் செய்து கொண்டா். ஆனால், அதிமுக ஆட்சியில் 1-1-2002-ல் மலிவு விலை மது விற்பனை திட்டம் அறிவிக்கப்பட்டது.

1993-ல் தமிழகத்தில் உள்ள பார்கள் ஒழிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவரது ஆட்சியில் 2002-ல் பார்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்னைச் சந்தித்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 1,300 பார்கள், 128 மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது என்பதைப்போல பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது உண்மையல்ல. 1937-ல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது, சென்னை மாகாணத்தில் அதுவரை நடைமுறையில் இல்லாத மதுவிலக்கை அமல்படுத்தினார். 25 மாவட்டங்களில் சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு இருந்தது. அதுவும் 1939-ல் முடிவுக்கு வந்தது. 1948-ல் ஓமந்தூரார் முதல்வரான பிறகே தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தினார். இதிலிருந்து திமுக ஆட்சியில் தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது என்ற வாதம் எவ்வளவு தவறானது என்பது தெளிவாகிறது.

1969-ல் எம்ஜிஆர் வெளியிட்ட அறிக்கையில், மதுவிலக்கு கொள்கையில் எந்தக் கட்சிக்கும், தனி மனிதனுக்கும் உள்ள அக்கறையைவிட முதல்வர் கருணாநிதிக்கு அதிக அக்கறை உண்டு என கூறியிருந்தார். இந்த அளவுக்கு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருந்த எம்ஜிஆர் ஆட்சியில்தான் 1-5-1981-ல் கள், சாராயக் கடைகள் திறக்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதா கூறுவது போல மதுவிலக்கில் அவரது அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in