Published : 18 Aug 2016 11:00 AM
Last Updated : 18 Aug 2016 11:00 AM

இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ-க்கள்: சட்டப்பேரவை நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா

‘எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கு செல்ல அனுமதி மறுப்பதா?’ என ஆவேசம்

இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பேரவை நுழைவுவாயில் முன்பு உட்கார்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம், வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அதிமுக - திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் 80 பேர் பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற் றப்பட்டதுடன், ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், தங்கம் தென் னரசு உள்ளிட்ட திமுக உறுப்பினர் கள் நேற்று காலை 9.30 மணி அளவில் சட்டப்பேரவை 4-ம் எண் நுழைவுவாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். ‘‘நாங்கள் பேரவைக்குள் செல்ல வில்லை. பேரவைக் கட்டிடத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குதான் செல்கிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும்’’ என்று திமுக உறுப்பினர்கள் கூறினர். ஆனாலும், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

திமுக உறுப்பினர்கள் அனை வரும் வரத் தொடங்கியதால், 4-ம் எண் நுழைவுவாயில் மூடப்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவை நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 10.15 மணிக்கு பேரவை வளாகத்துக்கு வந்தார். எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கு செல்ல அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திமுக உறுப்பினர்களுடன் தரையில் அமர்ந்து அவரும் போராட்டத்தில் ஈடுபட்டார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பூங் கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன் உள்ளிட்டோரும் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.

திமுக உறுப்பினர்களின் போராட் டம் காரணமாக, தலைமைச் செயல கம், சட்டப்பேரவை வளாகத்துக்கு வரும் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அதிமுக உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட அனை வரும் பலத்த சோதனைக்குப் பிறகு அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளே அனு மதிக்கப்பட்டனர். திமுக உறுப்பி னர்கள் போராட்டத்தால், பேரவை வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.

‘திட்டமிட்டு வரவில்லை’

பின்னர், செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

நடுநிலையோடு செயல்பட வேண்டிய பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படு கிறார். திமுக உறுப்பினர்கள் மீதான இடைநீக்க உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இடைநீக்கம் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள் இன்று பேரவை கூடியதும் வலியுறுத்தியுள்ளனர். இதை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர், ‘‘இடைநீக்க உத்தரவை திரும்பப் பெற முடியாது. நீங் களும் வேண்டுமானால் வெளியே செல்லுங்கள்’’ என சர்வாதிகாரத் துடன் கூறியுள்ளார்.

பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கதான் ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரவை நூலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளின் அறைகள், எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல தடை இல்லை. ஆனால், எங்கும் செல்லக் கூடாது என பேரவை நுழைவுவாயிலையே மூடிவிட்டனர். இதைக் கண்டித்து அடையாள தர்ணா நடத்தினோம்.

சட்டப்பேரவையில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறோம். வெளிநடப்பு செய்ய வேண்டும்; கலவரம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு நாங்கள் வரவில்லை.

பேரவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமை யும். நேரடி ஒளிபரப்பு செய்தால்தான் யார் தவறு செய்கிறார்கள் என்பது தெரியும். மக்களுக்கு உண்மை தெரிந்துவிடும் என்பதால்தான், நிதிப்பற்றாக்குறை என்று கூறி நேரடி ஒளிபரப்பை அரசு தவிர்க்கிறது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x