

தமிழக அரசுக்கும் 16 தொழில் நிறுவனங்களுக்கும் இடையே 5,081 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தொழில்கொள்கை (2014), தமிழ்நாடு அரசின் உயிரி தொழில்நுட்ப (பயோ டெக்னாலஜி) கொள்கை (2014), தமிழக அரசின் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகக் கொள்கை (2014), தமிழக அரசின் ‘தொலைநோக்கு திட்டம்-2023’ இரண்டாம் பகுதி மற்றும் தமிழ்நாடு கட்டுமான மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளம் ஆகியவையும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது.
2011-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு மக்களின் மேம்பாட்டுக்காக 2023-ம் ஆண்டுக்கான தொலை நோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் தொழில்துறை வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 14 சதவீதம் இருக்க வேண்டும் என்றும், 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து துறைகளிலும் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரவேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை அடைவதற்காக 2012-ம் ஆண்டு 17 நிறுவனங்களுடன் 26,625 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) 16 நிறுவனங்களுடன் 5,081 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 16,282 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதுவரை 33 நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மொத்தமாக 1,62,667 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தொலைநோக்கு திட்டத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் 6 (எரிசக்தி, போக்குவரத்து, கட்டுமானம், நகர்ப்புற மேம்பாடு, விவசாயம், மனிதவள மேம்பாடு) துறைகளில் 217 திட்ட அறிக்கைகள் இருக்கிறது.
விவசாயத் துறை முதலீடு ரூ. 40,000 கோடியிலிருந்து ரூ.1,21,400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மனித வள மேம்பாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.59,140 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2004-05- ம் ஆண்டு தமிழ்நாடு 11.45 சதவீத வளர்ச்சி அடைந்தது. 2005-06ல்
13.96 சதவீத வளர்ச்சி இருந்தது. ஆனால் அதன்பிறகு வளர்ச்சி சரிந்து 2007-08ம் ஆண்டில் 5.45 சதவீதமும், 2008-09-ம் ஆண்டில் 6.13 சதவீதமும், 2012-13-ம் ஆண்டில் 4.14 சதவீத வளர்ச்சியும் இருந்தது. அகில இந்திய அளவில் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உற்பத்தி துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும்போது, மாநிலத்தின் மொத்த வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இப்போதைக்கு மாநில ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்கு 17 சதவீதமாக இருக்கிறது. 2022-23-ம் ஆண்டுகளில் உற்பத்தி துறையின் பங்கு 22 சதவீதமாக உயரும்.
கடந்த இரண்டு வருடங்களில் பல மின் திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். விரைவில் 2500 மெகாவாட் கிரிட்டுடன் இணைக்கப்படும். 3300 மெகா வாட் திட்டமிடப்பட்டுவருகிறது.
மரபுசாரா எரிசக்தியில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மேலும் சமீபத்தில் சூரிய சக்தி கொள்கையும் வெளியிடப்பட்டது
இப்போது வெளியிடப்பட்ட கொள்கையும் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். உற்பத்தி துறையின் முக்கிய நகரமாக சென்னை விளங்கும்.
ஆட்டோமொபைல் துறை கொள்கை மூலம் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
2011 ஜூன் முதல் 2014 ஜனவரி வரை 1,46,800 கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது. இந்த வளர்ச்சி விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.
மேலும் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் அக்டோபர் மாதம் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பினை நடத்த இருக்கிறேன்.
இவ்வாறு முதலவர் ஜெயலலிதா கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி, இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர் கிரிஷ் கோபால கிருஷ்ணன், அசோசேம் தலைவர் ராணா கபூர், இந்திய தொழிலக கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் வேணு னிவாசன், ஃபிக்கி அமைப்பின் தலைவர் சித்தார்த் பிர்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.