

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களுடன் காட்டுமரங்கள் அகற்றப்படுவதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நீர்நிலைகளிலும், அரசுத்துறை சார்ந்த இடங்களில், பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சீமைக் கருவேல அகற்றும் பணியில் அரசு அலுவலர்களும், சம்பந்தப்பட்ட பட்டா நிலத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீமைக்கருவேல மரங்களுடன் காட்டு மரங்களும் அகற்றப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சீமைக்கருவேல மரத்துடன் பழமைவாய்ந்த காட்டு மரம் அகற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், விவசாயியுமான கவுரப்பன் கூறும்போது, சீமைக்கருவேல மரங்களை ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றியபோது, 10-க்கும் மேற்பட்ட காட்டு மரங்களை இயந்திரங்கள் மூலம் அறுத்து எடுத்துள்ளனர். துண்டு கட்டைகளாக மாற்றி டிராக்டர் மூலம் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, அதிகாரிகளுக்கு தெரிந்து தான் மரங்களை எடுத்து செல்கிறோம் என்றனர்.
நிலத்தடி நீருக்காக சீமைக்கருவேல மரங்களை அகற்றும் போர்வையில், பிற மரங்களையும் வெட்டுவது வேதனையளிக்கிறது. வெட்டப்பட்ட காட்டு மரங்களை வளர்க்க குறைந்தது 20 ஆண்டு களாகும் என்றார். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் போது, பிற மரங்களை அகற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.