

வேலூர் சிறையில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் போலீஸ் பக்ருதீன், கோரிக்கையை வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரை கண்காணிக்க கூடுதல் சிறைக் காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தற்கொலை மிரட்டல் தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் இவர்கள் மூன்று பேரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பன்னா இஸ்மாயில் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
இதற்கிடையில், பரமக்குடி முருகன் கொலை வழக்குத் தொடர்பாக கடந்த வாரம் ராமநாதபுரம் அழைத்துச் செல்லப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை காவல் முடிந்த நிலையில் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அன்று இரவு 10.40 மணியளவில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை காலை முதல் போலீஸ் பக்ருதீன் சிறை நிர்வாகம் வழங்கிய உணவை வாங்க மறுத்து சாப்பிடாமல் உள்ளார். தனது கூட்டாளிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை தன்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும். மற்ற கைதிகள் இருக்கும் பகுதிக்கு தங்களை மாற்ற வேண்டும். தாங்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால், கோபமடைந்த பக்ருதீன், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஜெயிலர் சூசை மாணிக்கம் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலை மிரட்டல் விடுத்த பக்ருதீன் தங்கிய தனி அறை பகுதியில் சிறை காவலர்களின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பக்ருதீனின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றதாக சொல்லப் பட்டது.