

தமிழ்நாடு தழுவிய சிறப்பு தடுப்பூசி இயக்கம், 9 மாதம் தொடங்கி 15 வயது வரையுள்ள 1.8 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ருபெல்லா தடுப்பூசி வழங்குகிறது.
இந்த இயக்கம் 6 பிப்ரவரி 2017 முதல் தமிழ்நாடு, கர்நாடகம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய ஐந்து மாநிலங்களில் 3.6 கோடி குழந்தைகளை இலக்காகக் கொண்டு தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக மற்ற மாநிலங்களில் இந்த தடுப்பூசி இயக்கம் படிப்படியே விரிவாக்கப்படும். இந்த தடுப்பூசி இதுவரை இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டு வந்த தட்டம்மை தடுப்பூசிக்கு மாற்றாக அமையும். இந்த தட்டம்மை ருபெல்லா (MR) தடுப்பூசி முதல் தவணை குழந்தையின் 9-12 மாதங்களிலும், இரண்டாம் தவணை 16-24 மாதங்களிலும் வழங்கப்படும்
இந்த தட்டம்மை ருபெல்லா (MR) தடுப்பூசி, ஏற்கனவே போடப்பட்டிருந்தாலும், நோய் தொற்றுக்கு ஆளாகி இருந்தாலும் கூட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த விழிப்புணர்வு இயக்கம், வயதுத் குழந்தைகளை 100 சதவிகிதம் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசி பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவந்து, பிறவியிலேயே ருபெல்லா பாதிப்புக்கு உள்ளாக Congenital Rubella Syndrome (CRS) கூடிய அழுத்தத்தையும், பாதிக்கப்படுகின்ற காலகட்டத்தையும் எதிர்கொண்டு நோய்த் தாக்கம் மற்றும் அதனை ஒட்டிய மரணத்தையும் விரட்ட முயல்கிறது. மேலும் இந்தியா 2020-க்குள் ருபெல்லா மற்றும் தட்டம்மையை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டுள்ளது.
தட்டம்மை ருபெல்லா குறித்த சில முக்கிய புள்ளிவிவரங்கள்
* உலகம் முழுவதிலும் 2015-ல் மட்டும் ஏறக்குறைய 1,34,200 இறப்புகள் தட்டம்மையால் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பான, விலைக்குறைவான தடுப்பூசிகள் இருந்தும் இவை நிகழ்ந்துள்ளன.
* தட்டம்மை தடுப்பூசியால் 2000 முதல் 2015 வரை உலக அளவில் 79% இறப்புகள் குறைந்துள்ளன.
* உலக காதார நிறுவன மதிப்பீட்டின்படி 2015-ல் இந்தியாவில் 49,200 குழந்தைகளின் இறப்புக்கு தட்டம்மை காரணமாக இருந்துள்ளது.
* ருபெல்லா தடுப்பூசியை அறிமுகம் செய்யாத நாடுகளில் பிறவியிலேயே ருபெல்லா பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் இழப்பு அதிகம்.
* ரூபெல்லா தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய் என்றாலும் நோய்த்தாக்கம் ஏற்பட்ட பின் அதனை குணப்படுத்த, குறிப்பிடும்படியான சிகிச்சைகள் இல்லை.
* 2010ல் மட்டும் 1 லட்சத்து மூவாயிரம் குழந்தைகள் பிறவியிலேயே ருபெல்லா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய தொற்றுடன் பிறந்துள்ளனர் என்றும் அதில் 46% சதவிகித குழந்தைகள் தென் கிழக்கு ஆசியாவில் உள்ளனர் என்று ஒரு மதிப்பீடு குறிப்பிடுகிறது.
* இந்தியாவில் ஒரு குழந்தைக்கு தட்டம்மை ருபெல்லா(MR) தடுப்பூசி போட ரூ.50 மட்டுமே ஆகிறது. ஆதாரம்: தடுப்பூசி பிரிவு, குடும்ப மற்றும் நலவாழ்வு துறை, இந்திய அரசு.
தட்டம்மை நோய்: ஓர் அறிமுகம்
தட்டம்மை இளம் குழந்தைகளின் மரணத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. Paramyxovirus வகை வைரஸ்களால் உருவாகும் இந்த நோய் இருமல் மற்றும் தும்மல் மூலமாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவக்கூடியது. தட்டம்மையை காய்ச்சலுடன் கூடிய சிகப்பு தடிப்புகள், இருமல், சளி மற்றும் கண் சிகப்பாதல் போன்ற அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். போதிய நோய் எதிர்ப்பு சக்தி அற்ற குழந்தைகளுக்கு இந்நோய்த்தாக்கம் எளிதில் ஏற்படும்.
நிமோனியா, வயிற்றுப்போக்கு மற்றும் மூளைத்தொற்று போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். ருபெல்லா ஒரு சாதாரண நோய்த்தொற்று என்றாலும் கருவுற்ற காலத்தில் நிகழும் நோய் தொற்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். கருவுற்ற புதிதில் ஏற்படும் ருபெல்லா நோய் தொற்று, கருச்சிதைவு, சிசு மரணம் மற்றும் கருவிலேயே பிறப்பு முரண்பாடுகள் போன்றவற்றோடு பிறவியிலேயே ருபெல்லா நோயுடன் (Congenital Rubella Syndrome (CRS))பிறக்கும் நிலையையும் ஏற்படுத்தும்.
Congenital Rubella Syndrome பல்தரப்பட்ட குறைபாடுகளை உருவாக்கும். குறிப்பாக கண் (பார்வை இழப்பு, கண்புறை), காது (செவி திறன் இழப்பு), மூளை (தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு) மற்றும் இதய குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கும். இவற்றுக்கான சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை முறைகள் அதிகம் செலவு பிடிக்கக்கூடியவை. இந்த இரண்டு நோய்களையும் வாழ்நாள் முழுக்க பாதுகாப்பினை அளிக்கக்கூடிய வல்லமையுள்ள தடுப்பூசிகளால் தடுக்க முடியும். ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதால் இக்குழந்தைகளுக்கு தடுப்பூசியை, முன்னுரிமை அளித்து வழங்கவேண்டும்.