

காவிரி பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக கர்நாடகத்தைப் போல தமிழகத்திலும் சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டாமா என்று முதல்வருக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரியிலிருந்து செப்டம்பர் 21 முதல் 27-ம் தேதி வரை தினசரி 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாள் காலையிலேயே கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டமும், மீண்டும் அமைச்சரவைக் கூட்டமும் அன்றைய தினம் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில் காவிரி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க ஆளுநர் அனுமதியோடு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை வரும் 24-ம் தேதியன்று கூட்டுவது என்றும் அதுவரை காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டி முன்னாள் பிரதமர் தேவகவுடாவை 10 ஆண்டுகளுக்குப் பிறகு சித்தராமையா நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். கர்நாடக அரசியல் தலைவர்கள் அனைவரும் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கூறி வருகின்றனர். இத்தகைய பரபரப்பான சூழல், அங்கு நிலவும் போது, தமிழகத்தில் அரசு என்று உள்ளதா என்று தான் தோன்றுகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. சம்பா பயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இத்தகைய நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தையோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ தமிழக அரசு கூட்டவில்லை. இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டாமா? இனியும் காலம் தாழ்த்தாமல், காவிரி பிரச்சினையில் முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.