

கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 200 பேர் விடுப்பில் சென்றனர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் மொத்தம் 301 மாணவிகள் படித்து வருகின்றனர். மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணைய (எம்ஆர்பி) தேர்வுக்கு எதிர்ப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் முழுவதும் 7 நாட்கள் மருத்துவமனை பணிகள் மற்றும் வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன்பின், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர் பயிற்சி மாணவிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினர். இதனை தொடர்ந்து “போராட்டங்களில் ஈடுபட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால், எங்களுக்கு விடுப்பு வேண்டும்” என மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணனிடம் மாணவிகள் கேட்டனர். மருத்துவக் கல்வி இயக்குனர் (டிஎம்இ) மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஒப்புதலுடன் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைத்தூர மாணவிகளுக்கு 6 நாட்களும், அருகில் இருப்பவர்களுக்கு 4 நாட்களும் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மொத்தமுள்ள 301 மாணவிகளில், 200 பேர் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
செவிலியர் பயிற்சி மாணவிகள் தொடர்ந்து ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கவனிக்க ஆள் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றதால், நிலமை ஓரளவு சரியானது. இந்நிலையில், ஒட்டு மொத்தமாக 200 மாணவிகள் விடுப்பில் சென்றுவிட்டதால், மருத்துவமனையில் நோயாளிகள் மீண்டும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.