வேலூர் வங்கியில் ரூ.22 லட்சம் திருடிய காசாளர் கைது

வேலூர் வங்கியில் ரூ.22 லட்சம் திருடிய காசாளர் கைது
Updated on
1 min read

வேலூர் சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் உள்ள வங்கியின் லாக்கரை உடைத்து ரூ.22 லட்சம் பணத்தை திருடிய காசாளர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

வேலூர் சிஎம்சி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எதிரே ‘சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக, இந்த வங்கிக் கிளை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

சிதறிக் கிடந்தன

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 2-வது சுழற்சி பணியின்போது, வங்கி காசாளர் உட்பட 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் மருத்துவமனை ஊழியர்கள் வங்கியில் பணத்தை செலுத்தியுள்ளனர். அந்த பணத்தை வங்கியின் மற்றொரு அறையில் உள்ள லாக்கரில் வைக்க வங்கி ஊழியரான குடி யாத்தம் பகுதியைச் சேர்ந்த முருகன்(44) என்பவர் உள்ளே சென்றார். அங்கு லாக்கர் திறக் கப்பட்டு புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கீழே சிதறிக் கிடந்தன.

லாக்கரைப் பார்த்தபோது, அதில் வைத்திருந்த பணமும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து முருகன் மற்றும் காசாளர் நாகராஜ்(28) ஆகியோர் வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கரில் இருந்த ரூ.22 லட்சம் திருட்டுபோனது தெரியவந்தது. மேலும், லாக்கர் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பி வளைக்கப் பட்டிருந்தது.

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் அஸ்வின் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியம், வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அறிவழகன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய போலீஸார், திருட்டுச் சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், வேலூர் காவல் துறை சரக துணைத் தலைவர் தமிழ்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

வங்கி ஊழியர்களான முருகன், நாகராஜ் ஆகியோரிடம் தனித்தனியாக போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், காசாளர் நாகராஜ் என்பவர் பணத்தை திருடி, வங்கியில் உள்ள ஒர் அறையில் மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, வங்கியின் காசாளர் நாகராஜை கைது செய்த வேலூர் வடக்கு போலீஸார், ரூ.22 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in