

போலீஸாரின் ஆரோக்கியத் தைப் பாதுகாக்கவும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தினார். அதன்படி சென்னையில் போலீ ஸார் மற்றும் அவர்களது குடும்பத் தினருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடத்தப்பட்டது.
இந்த முகாமை சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். சென்னையில் உள்ள சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு, ஆயுதப்படை மற்றும் இதரப் பிரிவு காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர். அப்போலோ தனியார் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பரிசோதனை, சிகிச்சைப் பணிகளை மேற்கொண்டனர்.
காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கண், காது, மூக்கு, பல், தொண்டை, இதயம், நுரையீரல் செயல்பாடு, எலும்பு, சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் பாகங்களை மருத்துவர்கள் பரிசோதித்தனர். நீரிழிவு, ரத்த அழுத்தப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் சங்கர், சேஷசாயி, மக்கள் தொடர்பு உதவி ஆணையர் முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.