

மோனோ ரயில் திட்டம் உள்ளிட்ட அனைத்து முக்கிய திட்டங்களையும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா இதற்கான உத்தரவை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
டெண்டர் கட்டத்தையே தாண்டாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மோனோ ரயில் திட்டம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இது பற்றிய செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
மோனோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டுமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் நடைமுறையில் இரண்டு நிறுவனங்கள் கடந்த மே மாதம் இறுதிக்கட்டத்தை அடைந்தன. அவற்றில், ஒன்றினை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்புகள் பிப்ரவரி இறுதியில் வெளியாகும் எனத் தகவல்கள் வந்துள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், நடத்தை விதிகள் அமலுக்கு வரும். மோனோ ரயில் திட்டம் மீண்டும் தாமதமாகும் என்பதால், கொடநாடு செல்வதற்கு முன்பாக
மோனோ ரயில் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார். தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை செயலாளர் பிரஜ் கிஷோர் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
மோனோ ரயில் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி அப்போது முதல்வருக்கு கணினி வழிப்படக்காட்சி மூலம் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இதன்பிறகு மோனோ ரயில் திட்டத்தின் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ள இரு சர்வதேச நிறுவனங்களில் தகுதியான ஒன்றினை விரைவில் இறுதி செய்து அதற்கான பணிகளைத் தொடங்கிவிடும்படி முதல்வர் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.
ஜனவரியில் முடிவு
இதைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். இது பற்றிய முடிவு வரும் ஜனவரி மாததத்தில் வெளியாகக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை மோனோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானத்தை மேற்கொள்வதற்கான நிறுவனத்தினை வரும் ஜனவரிக்குள் இறுதி செய்து விடுவோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பணிகளைத் தொடங்கிவிட்டால் பிறகு பிரச்சினை ஒன்றும் இல்லை,” என்றார்.
இதுமட்டுமின்றி, திருமழிசை துணை நகரம் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் அனைத்தையும் வரும் பிப்ரவரிக்குள் தொடங்கிவிட தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தேர்தலுக்கு பிறகு திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் மோனோ ரயில் திட்டத்தினை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வதற்கான ஆலோசக நிறுவனத்தை (கன்சல்டன்ட்) தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்குள்...தேர்தலுக்குப் பின்...
இது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:-
மோனோ ரயில் கட்டுமானத்தை மேற்கொள்வதற்கான ஒரு நிறுவனத்தினை எவ்வாறாவது வரும் ஜனவரிக்குள் தேர்வு செய்துவிடுவோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பணிகளைத் தொடங்கிவிட உறுதியாக இருக்கிறோம். அதன்பிறகு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருச்சி, மதுரை, கோவை மோனோ ரயில் திட்டத்தினை, செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
முதலில், அங்கு மோனோ ரயில் திட்டத்தினைச் செயல்படுத்த முடியுமா என்ற சாத்தியக் கூறுகளை ஆராய ஒரு ஆலோசக நிறுவனத்தை டெண்டர் மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.