காந்தியின் நினைவாக கிராம மக்கள் அமைத்த ஸ்தூபி

காந்தியின் நினைவாக கிராம மக்கள் அமைத்த ஸ்தூபி
Updated on
1 min read

67 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் காந்தி கிராமத்தில், மகாத்மா காந்தியிடம் நேரில் ஆசி பெற்ற இடத்தில் கிராம மக்கள் நினைவு ஸ்தூபி அமைத்துள்ளனர்.

கடந்த 1946 ஆம் ஆண்டு. விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டம். அப்போது காந்தி, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வந்தார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு, காந்தி மதுரைக்கு வந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு, பின்னர் ரயிலில் திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தார். இந்தத் தகவல் காட்டுத் தீயாக பரவியது.

திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மக்கள் காந்தியை நேரில் காணத் துடித்தனர்.

அதனால், சின்னாளப்பட்டி ரயில் நிலையத்தை ரயில் கடந்தபோது, தண்டவாளத்தை மறித்தனர். வேறு வழியின்றி என்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.

தன்னைக் காணவந்த கிராம மக்களின் அன்பால் நெகிழ்ந்த காந்தி, ரயிலை விட்டு இறங்கி அவர்களிடம் சிறிதுநேரம் கலந்துரையாடி விட்டு, பின்னர் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதன்பின், சின்னாளப்பட்டி அருகே ரயிலில் இருந்து காந்தி இறங்கிய இடத்தில், அவரது நினைவாக பொதுமக்கள் நினைவு ஸ்தூபி அமைத்தனர். அப்பகுதிக்கு, காந்தி கிராமம் எனப் பெயரிட்டு ஒரு புதிய கிராமத்தையே உருவாக்கினர்.

தற்போது, அந்த ஊருக்கு காந்தி கிராமம் என்ற பெயரே நிலைப்பெற்று விட்டது. அப்பகுதியில் காந்திகிராமப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பல்கலைக் கழகம் அமைய அப்பகுதி மக்கள் பலர் தங்களது நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளனர்.

தற்போது காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in