

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு இயக்கப்படும் சில பேருந்துகளில் அவசர வழி வசதி இல்லாததால், அவை கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருசில பேருந்துகளில் தமிழக எல்லை வரை மட்டுமே செல்ல உரிமம் உள்ளதால், கர்நாடக எல்லைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள், கர்நாடக எல்லை வரை இயக்கப்பட்டு, அங்கிருந்து மாற்று பேருந்து மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். பேருந்தில் பயணிகளை ஏற்றும்போது பெங்களூர் வரை பேருந்து செல்வதாகக் கூறி பயணச்சீட்டு வழங்குவதாகத் தெரிகிறது.
இதனால் ஓட்டுநர், நடத்துநர் களுக்கும், பயணிகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற் படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதேபோல் நேற்று சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற ஆம்னி பேருந்து உரிமம் இல்லாத காரணத்தால், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே நிறுத்தப்பட்டது. மாற்று பேருந்தின் மூலம் பயணிகள் செல்லுமாறு ஓட்டுநர், நடத்துநர் கூறியுள்ளனர். இதைக்கேட்ட பயணிகள் அவர்களிடம் தகராறு செய்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, `குடும்பத்துடன் சிரமம் இல்லாமல் செல்லவே ஆம்னி பேருந்தில் வருகிறோம். ஆனால் தமிழக எல்லை வரை ஆம்னி பேருந்தில் வந்துவிட்டு, இங்கிருந்து சாதாரண பேருந்துகளில் பெங்களூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.