Published : 27 May 2017 10:24 AM
Last Updated : 27 May 2017 10:24 AM

தேனி மலையடிவாரப் பகுதியில் வேட்டை நாய்களை வளர்க்க வனத்துறை தடை

தேனி மலையடிவாரப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வேட்டைநாய்களை வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மேகமலை வனஉயிரின உதவி காப்பாளர் நாகையா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் மா, வாழை, காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதனை அவ்வப்போது காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தி விட்டு செல்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

எனவே, காட்டுப்பன்றி இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, அவற்றை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும். வேட்டை நாய்களை வளர்க்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கைகளை நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் என்.வெங்காடசலத்திடம் விவசாயிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மேகமலை வனஉயிரின உதவி காப்பாளர் நாகையாவிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டார்.

அப்போது நாகையா பேசியதாவது: பயிர்களை காக்க காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல மற்ற மாநிலங்களில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்திலும் அனுமதி வழங்கக்கேட்டு அறிக்கை கொடுத்துள்ளோம். மலை அடிவார குடியிருப்பு பகுதியில் காட்டுப்பன்றிகள் விவசாயத்தை சேதப்படுத்தாமல் இருக்க சிலர் வேட்டை நாய்களை வளர்த்து வருகின்றனர். இதற்கு அனுமதியில்லை.

சாதாரண நாய்களை வளர்க்க அனுமதி உண்டு. அதே நேரத்தில் சாதாரண நாய்களும் காட்டுப்பன்றிகளை தேடி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது. காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கூடலூர், கம்பம், சின்னமனூர் பகுதியில் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x