சீமைக் கருவேல மரம் வங்கிக்கணக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.10 ஆயிரம் டெபாசிட்

சீமைக் கருவேல மரம் வங்கிக்கணக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.10 ஆயிரம் டெபாசிட்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி, இப்பணிக்காக ஏற்படுத்தப்பட் டுள்ள தனி வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்ததோடு நின்றுவிடாமல், கருவேல மரங்கள் அகற்றும் பணியை மாவட்டம்தோறும் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டு, அங்கு கருவேல மரங்கள் அகற்றப்படாமல் இருப்பதை ஆட்சியருக்கு சுட்டிக்காட்டினார். அடுத்த சில மணி நேரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கருவேல மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது, பெரும்பாலான மாவட்டங்களில் கருவேல மரங்களை அகற்று வதற்கு போதிய நிதி வசதியில்லை என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் சீமைக் கருவேல மரம் நிதி என்ற பெயரில் தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.

பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை இந்த வங்கிக் கணக்கில் செலுத்து மாறு நீதிபதிகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வங்கிக் கணக்கில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி ஏ.செல்வம், தனது சொந்தப்பணத்தில் ரூ.10 ஆயிரத்தை நேற்று டெபாசிட் செய்தார். இவரைப் பின்பற்றி வழக்கறிஞர்கள் பலர் கருவேல மரம் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in