

தேனி மாவட்டத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் நெல், செங் கரும்பு பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை யிலிருந்து கிடைக்கும் தண்ணீரின் மூலம் நேரடி பாசனமாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆண்டுதோறும் 14,707 ஏக்கர் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மறைமுக பாசனத்தில் 2.50 லட்சம் ஏக்கரில் வாழை, திராட்சை, செங் கரும்பு, காய்கறிகள் பயிரிடப் படுகின்றன.
முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்தனர். ஆனால் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கரும்பு பயிர்கள் காய்ந்து போயின.
இதற்கிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்ததை அடுத்து, கம்பம், உத்தமபாளையம் பகுதியில் உள்ள சில விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பின்னர் மழை பெய்யவில்லை. இதனால் நெல் பயிர்கள் கருகிவருகின்றன.
இதுகுறித்து உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நெல், செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மாரியப்பன், முத்து ஆகியோர் கூறியதாவது:
மழை பொய்த்ததால் போதிய தண்ணீர் கிடைக்காமல், செங்கரும்பு பயிர்கள் கருகிவருகின்றன. வசதிபடைத்த விவசாயிகள் வெளியிடங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து பயிரை காப்பாற்றுகின்றனர். ஆனால், அந்த அளவுக்கு வசதியில் லாத விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். சின்ன மனூர் பகுதியில் அறுவடைக்கு தயா ராக இருந்த நிலையில் 50 ஏக்கர் செங்கரும்புகள் காய்ந்துவிட்டன.
வழக்கமாக ஜூன் 3-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது நீர்மட்டம் குறைவாக இருப்பதால், தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதன் காரணமாக பால் பிடித்தி ருந்த நிலையில் நெல் பயிர்கள் கருகிவருகின்றன.
ஏற்கெனவே சூறாவளிக் காற் றால், வாழை மரங்கள் சேத மடைந்து விவசாயிகள் பாதிக்கப் பட்டனர். தற்போது நெல், கரும்பு பயிர்களும் கைவிட்டதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.