

மலைக் கிராமங்களிலும், விவசாய நிலங்களிலும் காட்டு யானைகள் ஊடுருவி சேதம் விளைவிக்காமல் இருப்பதற்காக வனத்துறையால் போடப்பட்ட அகழிகள், குறிப்பிட்ட பகுதிகளில் மக்களின் கேலிக்கு உள்ளாகி வருகின்றன.
வனப் பகுதியையொட்டி விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால், மலையிலிருந்து இறங்கும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளை பொருட்களை சேதப்படுத்துகின்றன. இதைத் தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வனச் சரகத்திலும் பல கிலோமீட்டர் தொலைவுக்கு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருப்பதற்காக, சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அகழிகள் வெட்டப்பட்டன. இதற்காக கோடிக்கணக்கில் செலவளிக்கப்பட்டது.
ஆனால், பல பகுதிகளில் இந்த அகழிகள் தொடர்பாக எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வருகின்றன. காரமடையிலிருந்து பில்லூர் சாலையில் குண்டூர், மானார் உள்ளிட்ட வழியோர மலைக் கிராமங்களில் வெட்டப்பட்டிருக்கும் யானைகள் அகழி குறித்து இப்பகுதியினர் கேலி பேசும் நிலையே உள்ளது.
ஒரு பக்கம் பார்த்தால் அகழிகள் மலைக்கு தடுப்புபோல தோன்றும். இன்னொரு திசையிலிருந்து பார்த்தால் மலையின் மீதிருந்து சறுக்கு விளையாட அமைக்கப்பட்ட பாதை போலவும், மேலிருந்து கீழாக இறங்கும் நீரோடை பள்ளம் போலவும் தோன்றும். இப்படிப்பட்ட அகழியில் காட்டு யானைகள் சறுக்கிக் கொண்டே ஊருக்குள் வந்து விடுகின்றன என்று கிண்டலுடன் பேசுகிறார்கள் மலைக் கிராம மக்கள்.
மானார் மலைக் கிராமத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியில் வன விலங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டி.
இதுகுறித்து வெள்ளியங்காடு விவசாயிகள் சங்கத் தலைவர் மூர்த்தி கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள ஆதிமாதையனூர், தோலம் பாளையம், வெள்ளியங்காடு, கண்டியூர் தேக்கம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட, வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இதுபோலத்தான் யானைகள் தடுப்பு அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றால் சிறிதும் பயனில்லை.
யானைகள் முன்பு வந்ததைவிட தற்போது அதிகமாகத்தான் வருகின்றன. அவை காலை கொஞ்சம் அழுத்தி, இந்த அகழிக்கு அருகில் வைத்து மண்ணைத் தள்ளி அதில் சறுக்கிக் கொண்டே ஊருக்குள் வந்து விடுகின்றன. யானைகள் வராமல் இருக்க அகழி வெட்ட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 7 அடி ஆழத்துக்கு குழி வெட்டி, குறுகலான அகலத்தில் ‘வி’ வடிவில் அகழியை அமைத்திருக்க வேண்டும். ஆனால், இங்கு அதுபோல அமைக்கவில்லை.
எனவே, இந்த அகழிகளை சறுக்கு விளையாட்டுபோல யானைகள் கடக்கின்றன. சுமார் 3 ஆண்டுகளாக இந்த அகழிகள் உள்ளூர் மக்களின் கேலிக்குரிய விஷயமாகவும், வெளியூர் மக்களின் காட்சிப் பொருளாகவும் மாறிவிட்டன. இதுபோல யானைகள் அகழியை அமைத்தது பயனில்லை என்று விவசாய குறைதீர்ப்புக் கூட்டங்களில் பலமுறை தெரிவித்தும், மாற்று ஏற்பாடு செய்யுமாறு மனு அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை.
தற்போது மலைக்கு மேலையே யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் தண்ணீருக்காக மலை அடிவாரத்துக்கு வந்து விடுகின்றன. வனத்தில் உள்ள தொட்டிகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் நிரப்புவதில்லை. இதனால் பெரும்பாலான யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடுகின்றன. சோலார் மின் வேலிகளும் பயன் அளிப்பதில்லை.
இவ்வாறு ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட, போதுமான அளவுக்கு வேட்டைத் தடுப்புக் காவலர்களும் இல்லை. சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு யானைகளை விரட்ட முடியாது. சுமார் 30, 40 வேட்டைத் தடுப்புக் காவலர்களாவது இருந்தால்தான், யானைகளை சமாளிக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.