

சைதாப்பேட்டை - டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து நெரிசல் இன்னும் 6 மாதங்களில் சீராகும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான பணிகளை மேற்கொண்டு வந்த ரஷ்ய நிறுவனம், அப்பணிகளை திட்டமிட்ட காலத்தில் முடிக்காததால் திடீரென வெளியேற்றப்பட்டது.
எஞ்சியுள்ள பணிகளை அதாவது, சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையில் பணிகளை மேற்கொள்ள எல் அண்டு டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், டிஎம்எஸ்ஸில் இருந்து மே தின பூங்கா வரையிலான பணிகள் சுமார் 15 மாதங்களாக கிடப்பில் இருந்தது. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் நிலவரப்படி, சைதாப்பேட்டை யில் இருந்து டிஎம்எஸ் இடையே சுரங்கப் பாதைகள் முடிந்து, ரயில்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், மே தின பூங்காவில் இருந்து டிஎம்எஸ் வரையில் 77 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘அண்ணாசாலையில் தோண்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் ரயில்பாதைகள் அமைக்கும் பணிகள் வரும் செப்டம்பரில் நிறைவடையும். பின்னர், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும். அண்ணாசாலையில் சைதாப்பேட் டையில் இருந்து டிஎம்எஸ் வரையில் பணிகள் நிறைவுக்கு ஏற்ப படிப்படியாக அண்ணா சாலையில் இருக்கும் தடுப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையில் போக்குவரத்து நெரிசல் சீராகும்” என்றனர்.