முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை

முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார்' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 'ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திங்கட்கிழமை இரவு திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து வரவேற்கத்தக்கது. ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்'' என்றார்.

'சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை' என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை' என்று அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in