Published : 08 Oct 2014 12:03 PM
Last Updated : 08 Oct 2014 12:03 PM

தமிழக சட்டம் - ஒழுங்கை சீரமைக்க மத்திய அரசு தலையிட வேண்டும்: திமுக தீர்மானம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீரமைக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கைது செய்யப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் நடந்து வரும் வன்முறை வெறியாட்டங்களை திமுக கடுமையாகக் கண்டிப்பதோடு, மத்திய அரசு உடனடியாக இதிலே தலையிட்டு இத்தகைய அராஜகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தின் விபரம்:

கடந்த 27-9-2014 அன்று அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் அவருடன் சேர்ந்த ஒரு

சிலர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்தது தொடர்பாக 17 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, தமிழகத்தில் எப்படிப்பட்ட அராஜகங்கள், ஆணவச் சேட்டைகள், வன்முறைச் செயல்கள், ஆர்ப்பாட்டங்கள் சட்டத்தின் ஆட்சி என்பதையே கேலிக்குரியதாக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன என்பதைத் தமிழ்நாடு மிகுந்த கவலையோடும், கனத்த இதயத்தோடும் அன்றாடம் கண்டு வருகிறது. குறிப்பாக நடுநிலையாளர்களும் பத்திரிகை தர்மம் பேணும் ஏடுகளும் வரவேற்றுப் பாராட்டும் இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி குன்ஹாவைப் பற்றியும், கழகத் தலைவர் கலைஞரைப் பற்றியும் எந்த அளவுக்குக் கடுமையான முறையில் விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்குக் காட்டுமிராண்டி

மொழியில் சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டுவதோடு, தேவையில்லாமல் தி.மு.கழகத்தை வம்புக்கு இழுக்கின்ற வகையில் கழகத் தலைவர் கலைஞரின் கொடும்பாவியைக் கொளுத்துவதாக அறிவித்துக் கொண்டு அப்படிப்பட்ட அநாகரிகமான காரியங்களிலே அ.தி.மு.க. வினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு, காவல் துறையினரிடம் முறைப்படி அனுமதி பெறாமல், தாங்கள் நினைத்த இடங்களில் எல்லாம் நூறு பேர் இருநூறு பேர் கூடிக் கொண்டு அந்தச் சாலை வழியாகச் செல்பவர்களுக்கு இடைஞ்சல் செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து வருகிறார்கள். மேலும் அரசுக்குச் சொந்தமான பேருந்துகளைத் தடுத்துத் தீயிட்டுக் கொளுத்துகின்ற காரியங்களிலும் ஈடுபட்டு, அரசின் பொதுச் சொத்துகளுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பொறுப்பான நீதி மன்றத்தினால் சட்ட விதி முறைகளின்படி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, வழங்கப்பட்ட தீர்ப்பையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக அவமதிக்கின்ற செயலில் ஈடுபட்டுப் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படுத்துவது முறைதானா என்றெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப் படாமல், அ.தி.மு.க. வினர் சட்டத்தைத் தங்கள் கையிலே எடுத்துக் கொண்டு, வன்முறைத் தர்பாரை தமிழ்நாட்டிலே கடந்த பத்து நாட்களாகக் கட்டவிழ்த்து விட்டு, அதன் காரணமாக தமிழ்நாடே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.

சட்ட நெறிமுறைகளை நசுக்கி அழிக்கும் அ.தி.மு.க. வினரின் இப்படிப்பட்ட சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுக்க முடியாத கையறு நிலையில் இருப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாடு காவல் துறையினர் ஆளுங்கட்சியினரின் செயல்களுக்கு துணை போய்க் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். அ.தி.மு.க. வினரின் இந்தக் கொடூரத்தாக்குதல்கள் செய்திகள் வெளியிடும் நிறுவனங்களையும், பத்திரிகையாளர்களையும் விடவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஆளுங்கட்சியையும், அ.தி.மு.க. வினரையும் மனசாட்சிக்கு மாறாகப் பாராட்டி வந்த பத்திரிகைகள் எல்லாம் கூட, அவர்கள் செய்கின்ற அக்கிரமங்களை அனுபவ ரீதியாக உணர்ந்த பிறகு, இந்த வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்து எழுத முற்பட்டுள்ளார்கள். சுருக்கமாகக் கூற வேண்டுமேயானால், தமிழகத்தில் அரசமைப்புச் சட்ட இயந்திரம் என்பது முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது. இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலை தொடர அனுமதிக்கப்படுமேயானால், பொது மக்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் பொது அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு சட்டம், ஒழுங்குப் பிரச்சினை மீட்க முடியாத அளவுக்குத் தமிழகத்தில் மிகவும் மோசமாகி விடும்.

தமிழகத்திலே நடைபெறும் அ.தி.மு.க. வினரின் இந்த வன்முறை வெறியாட்டங்களை தி.மு. கழக மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதோடு, மத்திய அரசு உடனடியாக இதிலே தலையிட்டு இத்தகைய அராஜகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x