Published : 08 Feb 2017 04:53 AM
Last Updated : 08 Feb 2017 04:53 AM

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதன்மை வகித்த ஓபிஎஸ்!

என்னை கட்டாயப்படுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் மல்க கூறினார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 40 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியபின் நிருபர்களைச் சந்தித்த அவர், மக்களும் தொண்டர்களும் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்றும் அறிவித்தார். ஆட்சிப் பொறுப்புக்கு நல்லவர் ஒருவர்தான் வரவேண்டும் என்றும், கட்சியைக் காப்பாற்ற தன்னந்தனியாக போராடுவேன் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தொலைக்காட்சி நேரலையில் ஓ.பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்துவதையும், பேட்டியளிப்பதையும் பார்த்தபடியே நெட்டிசன்கள் ட்விட்டரில் நிமிடத்துக்கு ஆயிரக்கணக்கான பதிவுகளைக் கொட்டத் தொடங்கினர்.

குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக >#ஓபிஎஸ், >#OPannerselvam>#Panneer>#IsupportOPS உள்ளிட்ட ஹேஷ்டேகுகளில் நொடிக்கு நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் கொட்டப்பட்டன. இவை ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்திலும் வலம் வந்தன.

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்ற குரல் வலுவாகவே ஒலித்ததை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் அரசியல் நகர்வின் பின்னணியில் பாஜகவோ அல்லது திமுகவோ இருப்பதாகவும் சந்தேகித்து பல பதிவுகள் இடப்பட்டன.

>#Sasikala>#ADMK>#ChennaiDrama>Poes Garden உள்ளிட்ட ஹெஷ்டேகுகளும் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன. இவற்றில் தற்போதைய அரசியல் நகர்வு குறித்தும் பெரும்பாலன பதிவுகளும் விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தன.

குறிப்பாக, > #OPSvsSasikala என்ற ஹேஷ்டேகில் விறுவிறுப்பான விவாதங்களும் இடம்பெற்றன.

இந்த ஹேஷ்டேகுகளைக் கொண்டு நையாண்டித்தனமானதும், சிந்திக்கத் தூண்டுவதுமான நூற்றுக்கணக்கான மீம்களும் உருவாக்கப்பட்டு அவை உடனுக்குடன் பகிரப்பட்டன.

இதேபோல், ஃபேஸ்புக்கில் பல்வேறு ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி, ஓ.பன்னீர்செல்வம் அதிரடியை முன்வைத்து நிமிடத்துக்கு ஆயரக்கணக்கான பதிவுகள் இடப்பட்டு தீவிரமாக விவாதிக்கப்பட்டு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x