

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், வீட்டுமனைப் பட்டா கோரி சாட்டையால் அடித்துக் கொண்டும், கையில் கத்தியால் கீறிக்கொண்டும் சிலர் போராட்டம் நடத்தினர். கோவை தடாகம் ரோடு காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
தெருக்களில் வித்தை காட்டியும், சாட்டையால் அடித்துக் கொண்டும் பிழைப்பு நடத்தும் இவர்கள், வீட்டுமனைப் பட்டா கோரி மனு வழங்குவதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்ததாகத் தெரிவித்தனர்.
அவர்களில் சிலர் திடீரென ஆட்சி யர் அலுவலகம் முன், தங்களைத் தாங்களே சவுக்கால் அடித்துக்கொண் டும், நடனமாடியும் போராட்டம் நடத்தினர். மேலும், இளைஞர்கள் சிலர் தங்களது கைகளில் கத்தியால் கீறிக் கொண்டனர். உடனே அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, ஆட்சியரிடம் மனு வழங்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, “நாங்கள் வீதிகளில் சாட்டையால் அடித்துக் கொண்டும், வித்தைகள் காட்டியும் பிழைக் கிறோம். 30 குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள், கோவை காந்தி பார்க் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பிளாட்பாரத்தில்தான் வசித்து வருகிறோம். மழை, வெயிலில் நனைந்தும், போதுமான இடமின்றியும் தவிக்கிறோம். இந்நிலையில், அங்குள்ள கடைக்காரர்கள் எங்களை விரட்டி அடிக்கின்றனர்.
எனவே, எங்களுக்கு சொந்த வீடு கட்டிக்கொள்ள வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஏதாவது தொழில் செய்யவும் உதவ வேண்டும். இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட விருப்பமில்லை. எங்களது குழந்தைகளை படிக்க வைக்க விரும்புகிறோம். எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றனர்.