

மாட்டு இறைச்சி தடைக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரக் கூடிய நிலையில் சென்னை ஐஐடியிலும் மாணவர்கள் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை மாலை இப்போராட்டம் நடைபெற்றது.
இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு குறித்து விவாத அரங்கமும் நடைபெற்றது.
முற்போக்கு மாணவர்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் பல வகையிலான மாட்டு இறைச்சி உணவுகள் நேற்றைய போராட்டத்தின் போது பரிமாறப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவே மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்று ஐஐடி மாணவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் மாட்டு இறைச்சி தடைக்கு எதிரான உத்தரவைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வரும் சூழலில் மாணவர்கள் தரப்பில் தமிழகத்தில் முதல் போராட்டமாக ஐஐடி போராட்டம் அமைந்துள்ளது.
ஏற்கனவே ஐஐடியில் செயல்பட்டு வந்த அம்பேத்கர் – பெரியார் வாசக வட்டம் அமைப்பு தடை செய்யப்பட்ட போது நடைபெற்ற போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்தது நினைவு கூரத்தக்கது.