

நேரு உள்விளையாட்டரங்கை மேம்படுத்த ரூ.12 கோடி உள்பட தமிழக விளையாட்டு மேம்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதா 35 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சத்தான சமச்சீர் உணவு வகைகள் நாள்தோறும் வழங்குவதற்கு ஏதுவாக தற்பொழுது நாளன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தொகையான 75 ரூபாயை 250 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 10 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிலும் சிறுவர், சிறுமியருக்கு உணவுக்காக நாளன்றுக்கு நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவி யருக்காக தனித் தனியாக சிறப்பு விளையாட்டு விடுதி கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு நபர் ஒன்றுக்கு நாளன்றுக்கு 90 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் முதன்மை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப் பட்டு வரும் உணவுப்படி, நாளன்றுக்கு நபர் ஒன்றுக்கு 250 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக தேவைப் படும் செலவினத்திற்காக கூடுதலாக 55 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டின் போது ஹாக்கி போட்டிகள் நடத்துவதற்காக செயற்கை இழை வளைகோல்பந்து ஆடுகளம் 1995 ஆம் ஆண்டு மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டது. இந்த ஆடுகளத்தில் பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகளம் 2004 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த ஆடுகளம் சீரமைக்கப் பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டப் படியால், தற்பொழுது இந்த ஆடுகளம் வழுக்கும் தன்மை யுடையதாக உள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும், வருங் காலங்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளை கருத்திற் கொண்டும், செயற்கை இழை ஆடுகளத் தினை 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அனைத்தும் 15 முதல் 20 ஆண்டுளுக்கு மேல் கட்டப்பட்டவையாதாலால் அவைகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் கட்டமைப்புகளை புதுப்பிக்கவும் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஒரு முறை சிறப்பு மானிய மாக 5 கோடி ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளிக் கல்வி பயிலும் 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டில் உயர்தரமான பயிற்சி அளிப்பதற்காக, சென்னை நேரு விளையாட்டரங்கில் சிறுவர்களுக்காகவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறுமியர்களுக்காகவும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்கள் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இதேபோன்று உலகத்தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்களை ஸ்ரீரங்கம், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய 3 இடங்களில் துவக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடை பெற்ற 7-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக சென்னை யில் நவீனமயமாக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு விளை யாட்டரங்கம், உள்விளையாட்டரங்கம், மேயர் ராதா கிருஷ்ணன் வளைகோல்பந்து விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல்குள வளாகம், டென்னிஸ் விளை யாட்டரங்கம் போன்ற விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
சமீபத்தில் நேரு உள்விளையாட்டரங்கம் அருகில் செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து திடல் வசதிகள் விளை யாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதியில் விளையாட்டு வீரர்கள் மேலும் பயன் அடைவதற்காக ஸ்குவாஷ் அரங்கம், இறகு பந்து உள்ளரங்கம், கையுந்து பந்து, கூடை பந்து ஆடுகளங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கென பிரத்யேக நீர் சிகிச்சை நீச்சல் குளம் ஆகியவை கொண்ட மேம் படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஒன்றினை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் போது, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் வசதியாக தங்கு வதற்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இரு இடங்களில் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தங்குமிடம் மற்றும் உணவுக்கூட வசதிகள் ஏற்படுத்திட 3 கோடி ரூபாய் நிதியினை வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட உத்தரவுகளின்படி விளையாட்டு மேம்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதா 35 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.